சிவாஜி பட டைட்டிலை தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன்! சுதா கொங்கரா செய்யப்போகும் சூப்பர் சம்பவம்!
சிவகார்த்திகேயனின் 25-வது படத்துக்கு பராசக்தி என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை : காமெடி கலந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், சமீபத்தில் அமரன் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்நது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனைத்தொடர்ந்து இப்போது தரமான படங்களை அழுத்தமான கதையுடன் கொடுக்கும் இயக்குநர் சுதாகொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் முன்னதாக சூர்யா தான் நடிக்கவிருந்தார். படத்திற்கு புறநானுறு என்ற பெயரும் வைக்கப்பட்டு இருந்தது. பிறகு சில காரணங்களால் சூர்யா படத்திலிருந்து விலகினார். அதன்பிறகு இந்த படத்தின் கதையை சிவகார்த்திகேயனிடம் கூறி சுதாகொங்கரா இந்த படத்தில் அவரையும் நடிக்க வைக்க சம்மதம் வாங்கிவிட்டார்.
இந்த படத்தில் ரவிமோகன், அதர்வா, உள்ளிட்டோரும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாகவும் படத்தின் பூஜை நடைபெறும் போதே அறிவிக்கப்பட்டும் இருந்தது. இந்த சூழலில், தற்போது படத்தின் தலைப்பு குறித்த தகவல் ஒன்றும் வெளிவந்துள்ளது.
அதன்படி, இந்த திரைப்படத்திற்கு பராசக்தி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் தலைப்பு வெளியிட டீசர் தயார்செய்யப்பட்டு இருக்கும் நிலையில், அந்த டீசரை சென்சார் குழுவுக்கு படக்குழு அனுப்பியுள்ளது. அதற்கான சான்றிதழும் தற்போது கசிந்துள்ளது. அதில் தான், படத்தின் பெயர் பராசக்தி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பராசக்தி என்ற தலைப்பு இதற்கு முன்பு சிவாஜி திரைப்படத்திற்கு வைக்கப்பட்டிருந்தது. நடிப்புக்கு இலக்கணமாக திகழும் சிவாஜி நடித்த முதல் படமும் அது தான். எனவே, அந்த படத்தின் தலைப்பை தேர்வு செய்து சிவகார்த்திகேயன் படத்திற்கு இயக்குநர் சுதா கொங்கரா வைத்துள்ள காரணத்தால் கண்டிப்பாக படம் பெரிய அளவில் பேசப்படும் என தெரிகிறது.