300 கோடி வசூலை நெருங்கும் அமரன்…எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?
அமரன் திரைப்படம் வெளியான 15 நாட்களில் உலகம் முழுவதும் 275 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து இன்னும் வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மக்களை எமோஷனலில் உருக வைத்து வருகிறது என்று தான் சொல்லவேண்டும்.
கிட்டத்தட்ட 15கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் இதுவரை 275 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. இன்னும் படம் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டு இருப்பதால் 300 கோடி வசூலையும் தொடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. படம் நன்றாக ஓடிக்கொண்டு இருப்பதால் ஏற்கனவே, திரையரங்கு உரிமையாளர்கள் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியைத் தள்ளி வைக்கவேண்டும் என வேண்டுகோள் வைத்து இருந்தனர்.
இருப்பினும், படம் ஓடிடி தளத்திற்கு எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இதனையடுத்து, அமரன் படம் எப்போது எந்த ஓடிடியில் வெளியாகும் என்ற தகவலும் கிடைத்துள்ளது. படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை நெட்ஃபிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
படம் நன்றாக ஓடி கொண்டு இருப்பதால் இந்த மாதம் வெளியிடவேண்டாம் என முடிவெடுத்து அடுத்த மாதம் படத்தினை ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, அமரன் படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.