“மாரி நீங்க வேற மாறி”.. பரியேறும் பெருமாள் முதல் வாழை வரை வரிசை படுத்திய மாரி செல்வராஜ்.!
சென்னை : இதுவரை தான் இயக்கிய படங்களுக்குப் பின்னால் இப்படி ஒரு சிந்தனையை மாரி செல்வராஜ் மறைத்து வைத்திருக்கிறார் என்பது வியப்பாகத்தான் இருக்கிறது. “வாழை” திரைப்படம் வெளியாகி பலரின் கனத்த இதயத்தைக் கண்ணீரால் கரைத்திருக்கும் நிலையில், உலகமே திரும்பிப் பார்க்கும் படைப்பாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
அவரின் இந்த தாக்கம் மிக்க கதைக்களத்துக்குப் பின்னால் என்னதான் இருக்கிறதோ தெரியவில்லை என்ற ரசிகர்களின் கேள்விக்கு, மாறி செல்வராஜின் பதில், “வாழை படத்தை முதல் படமாகவும், கர்ணன் படத்தை இரண்டாவது படமாகவும், பரியேறும் பெருமாள் படத்தை மூன்றாவதாகவும், மாமன்னன் படத்தை நான்காவது படமாகவும் பாருங்கள்” என்பதுதான்.
சத்தம் இல்லாமல் சம்பவம் செய்து விட்டு அமைதியாகப் புருவம் தூக்கிப் பார்க்கும் மாரி செல்வராஜின் ஆணவம் அற்ற கர்வத்துக்குப் பின்னால், வாழ்க்கையில் அவர் பட்ட கசை அடிகள்தான் கதைகளுக்கான அடித்தளமாக அமைந்திருக்கிறது. இதன் உண்மையை “வாழை” வெளிச்சம் போட்டுக் காண்பித்துவிட்டது.
இந்த படம் தொடர்பான ஒரு நேர்காணலில், மாரி செல்வராஜ் பேசிய அந்த வீடியோவை பார்க்கும்போது உடல் சிலிர்க்கிறது. அதில் தன் படத்திற்குப் பின்னால் இருக்கும் கருத்தை அவர், “பஸ்ஸே நிக்காத ஊரிலே இருந்து கிளம்பிப்போன ஒருத்தன், பஸ்ஸ நிப்பாட்டுன ஒருத்தன், அதனால ஒருத்தன் ‘லா’ காலேஜூக்கு படிக்க போரான், அதனால ஒருத்தன் அரசியல் கத்துக்குறான், அதனால ஒருத்தன் மா மண்ணனா மாறுறான்.” எனக் கதையைச் செதுக்கிய விதத்தை விவரித்தார்.
ஸ்கெச் போட்டு ப்ளேன் செய்வார்கள் என கேட்டிருப்போம்.. ஆனால் இவர் ஸ்கெச்சுக்கே ப்ளேன் போட்டிருப்பார் போல. அப்படி இருக்கிறது அவர் திரையுலக நகர்வு. “வாழை” தான் தனது முதல் கதை என பல இடங்களில் மாரி செல்வராஜ் கூறி இருந்தாலும், இந்த கதையைத் தான் யார் என உலகத்திற்கு நிரூபித்து விட்டுத்தான் இயக்க வேண்டும் என்ற நிதானத்தில்தான் அவரின் வெற்றி இருந்திருக்கிறது.
பல வெற்றிப்படங்களை கொடுத்துவிட்டு தான், இந்த வலியை மக்களிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் மாரி செல்வராஜ். அனைத்து சாதியிலும் அடித்தட்டு மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அடிப்படைத் தேவைகளுக்குக்கூட அல்லாடித்தான் வாழ்கிறார்கள். அவர்களுக்கான சமத்துவம் பேசும் மார்க்சியம் தான் மாரி செல்வராஜ் என்றால் அது மிகையாகாது. அரசியலை ‘ஆ’ எனக் காட்டி மிகைப்படுத்தாமல், இவ்வளவுதான் என எளிமையான கதைகளோடு கடந்து செல்லும் கதாநாயகன் மாரி செல்வராஜ்.