விடைபெற்றார் மனோஜ்… தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்த மகள்..!
மாரடைப்பால் காலமான நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் (48) உடல், பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

சென்னை : தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவரது மறைவுக்கு நேற்று முதலே பல்வேறு திரைபிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக விளங்கிய மனோஜ், தனது நடிப்பால் பலரது மனதை கவர்ந்தவர்.
அவரது மறைவு திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மனோஜின் குடும்பம், நண்பர்கள் மற்றும் சக கலைஞர்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். அவரது தந்தை பாரதிராஜா, தனது மகனின் மறைவால் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்ந்தார், அவருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
மனோஜ் பாரதிராஜாவின் இறுதி ஊர்வலம் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து தொடங்கி, சென்னை பெசன்ட்நகர் மின் மயானத்திற்கு கொண்டு வரப்பட்டது. முதலில், அவரது உடலுக்கு தந்தை பாரதிராஜா, மகள்கள் ஆகியோர் கண்ணீருடன் இறுதிச்சடங்குகளை செய்தனர்.
பின்னர், மின் மயானத்தில் மனோஜின் இரு மகள்களும் தங்கள் தந்தைக்கு செய்யவேண்டிய சடங்குகளை செய்தனர். இறுதியாக, இறுதிச் சடங்கு செய்யப்பட்ட அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. பல கதாபாத்திரங்கள் மூலமாக நம் மனதில் இடம்பிடித்த மனோஜ், இறுதியாக காற்றோடு காற்றாக கலந்துவிட்டார்.