குட் பேட் அக்லி படத்தில் நடித்துள்ள மலையாள நடிகர் ”ஷைன் டாம் சாக்கோ” கைது.!
போதைப் பொருள் வழக்கில் குட் பேட் அக்லி படத்தில் நடித்த மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில், எர்ணாகுளத்தில் உள்ள விடுதியில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக போலீசார் ரெய்டுக்குச் சென்ற போது, அங்கிருந்து அவர் தப்பி ஓடினார்.
போதைப் பொருள் குறித்த சோதனையின் போது தப்பி ஓடிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து காவல்துறை சார்பில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இன்று விசாரித்த நிலையில், குற்றம் செய்தது உறுதி செய்யப்படவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிட்டத்தட்ட மூன்று மணி நேர விசாரணைக்குப் பிறகு, போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் சம்பவம் நடந்த நேரத்தில் அவர் போதைப்பொருள் போதையில் இருந்தாரா என்பதை அறிய மருத்துவ பரிசோதனைக்காக எர்ணாகுளம் தாலுகா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
போலீஸாரிடம், தான் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும், போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றதாகவும் ஷைன் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விசாரணையின் போது, ஹோட்டல் சோதனை நடந்த நாளில் தான் எந்தப் பொருளையும் பயன்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார். அவரது வாக்கு மூலங்களில் முரண்பாடுகள் இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விவகாரம் தொடர்பாக, ஷைன் டாம் சாக்கோவுக்கு மலையாள நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.