‘அந்த படமாவது வந்திருக்கலாம்’ ஏமாற்றிய விடாமுயற்சி., கொந்தளிக்கும் அஜித் ரசிகர்கள்!
அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகாது என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை : அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’. இப்படம் முதலில் 2024 தீபாவளிக்கு ரிலீசாகும் என கூறப்பட்டது. ஆனால் படக்குழு அதனை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பதால் ரசிகர்கள் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
அப்படத்திற்கு பிறகு அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் முடித்து முதலில் 2025 பொங்கல் ரிலீஸ் என போஸ்டர்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அப்பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவீ மேக்கர்ஸ்.
அதன் பிறகு விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்ததை அடுத்து, ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் பொங்கல் ரிலீஸ் என்ற முடிவில் இருந்து ஒதுங்கி கொண்டது. அதன் பிறகு விடாமுயற்சி டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பபை பெற்றது. அதிலும் கூட பொங்கல் 2025 ரிலீஸ் என்று குறிப்பிடப்பட்டது.
அதன் பிறகு வெளியான விடாமுயற்சி முதல் பாடலில் கூட பொங்கல் ரிலீஸ் என குறிப்பிடப்பட்டிருந்ததால், இந்த வருட பொங்கலுக்கு விடாமுயற்சி படம் வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். மேலும் ஜனவரி 1 (இன்று) விடாமுயற்சி ட்ரைலர் வரும் என சிலர் இணையத்தில் கூறியதால், ட்ரைலருக்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.
ஆனால், நேற்று இரவு விடாமுயற்சி படக்குழுவில் இருந்து வந்த அறிவிப்பு ரசிகர்கள் கோபமடைய செய்துவிட்டது என்றே கூறலாம். சில தவிர்க்க முடியாத காரணத்தால், விடாமுயற்சி ரிலீஸ் பொங்கல் இல்லை என்று வேறு தேதி எதுவும் அறிவிக்காமல் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பை வெளியிட்ட லைகா நிறுவன எக்ஸ் தள பதிவில் அஜித் ரசிகர்கள் பட தயாரிப்பு நிறுவனத்தை திட்டி தீர்த்து வருகின்றனர்.
விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வருகிறது என்ற காரணத்தாலேயே, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் பொங்கல் ரிலீசில் இருந்து பின்வாங்கியது. ஆனால், இப்போது இந்தப்படமும் இல்லாமல் இந்த படமும் இல்லாமல் அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.