வாழைக்கு போட்டியா கொட்டுக்காளி..’சிவகார்த்திகேயன் செஞ்சது வன்முறை’ – அமீர் காட்டம்!
சென்னை : கொட்டுக்காளி படத்தை நான் எடுத்திருந்தேன் என்றால் தியேட்டருக்கே கொண்டு வந்து இருக்க மாட்டேன் என இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.
வாழை படத்துடன் ரிலீசான சூரியின் கொட்டுக்காளி படம் வாழை படத்தின் அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் ஒரு அளவிற்கு பாசிட்டிவான வரவேற்பை பெற்று வருகிறது. கொட்டுக்காளி படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னதாகவே, 74-வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இப்படி சர்வதேச திரைப்பட விழாக்களில் ஒளிபரப்பு செய்யப்பட்ட காரணத்தால் கொட்டுக்காளி படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தது என்றே சொல்லலாம்.
எனவே, படம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான போதிலும், வாழை படத்துடன் இறங்கிய காரணத்தால் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் மத்தியில் கொட்டுக்காளி பேசப்படவில்லை. இந்த சூழலில், மௌனம் பேசியதே, பருத்திவீரன், போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய அனுபவம் வாய்ந்த இயக்குனர் அமீரே கொட்டுக்காளி படத்தை மட்டும் நான் எடுத்திருந்தால் நிச்சியமாகத் திரையரங்குகளுக்குக் கொண்டு வந்திருக்க மாட்டேன் என வெளிப்படையாகப் பேசி உள்ளார்.
சென்னையில் ‘கெவி’ படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றதில் இயக்குனர் அமீர் கலந்துகொண்டிருந்தார். அதில், கலந்துகொண்ட அமீர் பேசியதாவது ” வாழை படத்தை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அதற்கு முக்கியமான காரணமே வாழை படம் திரையரங்குகளில் வெளியாகி எல்லா மக்களும் பார்க்கும் படங்கள் போல் இருப்பது தான்” என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் “கொட்டுக்காளி படத்தை லாபத்துக்காக வாழை படத்துடன் போட்டியாகக் கொண்டு வந்தது என்னைப் பொறுத்தவரை வன்முறை தான்” என்று படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் பெயரைச் சொல்லாமல் சூசகமாக அமீர் விமர்சனம் செய்தார். கொட்டுக்காளி படம் திரையரங்குகளுக்கான படம் இல்லை விருது விழாக்களுக்கு அனுப்பப்பட வேண்டிய ஒரு நல்ல படம் என்பதையும் அமீர் குறிப்பிட்டு பேசினார்.
அதைப்போல, கொட்டுக்காளி படத்தினை திரையரங்குகளுக்குக் கொண்டு வராமல் ஓடிடியில் விற்பனை செய்திருக்கலாம். படம் பிடித்தவர்கள் அதில் படத்தை பார்த்துவிட்டு மகிழ்ந்திருப்பார்கள். நிச்சியமாக நான் மட்டும் கொட்டுக்காளி படத்தினை எடுத்திருந்தால் திரையரங்குகளுக்கு எடுத்து வந்திருக்கமாட்டேன்” எனவும் அமீர் சற்று காட்டத்துடன் தெரிவித்தார். அமீர் பேசியதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அமீர் சொல்வது சரி தான் என கூறி வருகிறார்கள்.