கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!
தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் 11 ஆண்கள் அடங்குவர், அவர்களில் எட்டு பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக கொல்கத்தா காவல் ஆணையர் மனோஜ் வர்மா தகவல் தெரிவித்துள்ளார். மேலும், 13 பேர் காயமடைந்தனர், தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
உயிரிழந்த 14 பேரில் மூன்று பேர் தமிழகத்தின் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீ விபத்து சம்பம் குறித்து கொல்கத்தா காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இறந்தவர்களில் 11 ஆண்கள் அடங்குவர், அவர்களில் எட்டு பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கட்டிடத்தின் 42 அறைகளில் 88 பேர் தங்கியிருந்த ஹோட்டலில் இரவு 7.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக அவர் கூறினார். தீயை அணைக்க பத்து தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன, பின்னர் அதிகாலை 3.30 மணியளவில் தீ இறுதியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
மீட்புப் பணிகள் இன்னும் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
மருத்துவ சிகிச்சையில் அஜித்! காரணம் என்ன?
April 30, 2025