மர்ம நபர்களால் காலா திரைப்படத்தின் டீஸர் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டது!
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கி ரஜினிகாந்த் நடிப்பில் உள்ள புதிய திரைப்படம் ‘காலா’. இப்படத்தின் டீஸர் மார்ச் 1 (நேற்று) வெளியிடப்படும் என படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷ் அறிவித்திருந்த நிலையில், காஞ்சி சங்கராச்சாரியார் மறைவை அடுத்து மார்ச் 2 (இன்று) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று தனுஷ் அவருடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் டீஸர் இணையதளத்திலும், சமூகவலைதளத்திலும் வெளியாகி இருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
மேலும் இந்த டீஸரில் வரும் ஒரு வசனத்தில் நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பேசப்படும் வட்டார வழக்கு மொழியில் வசனம் பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் “வேங்கையன் மவன் ஒத்தையா நிக்கன், தில்லு இருந்தா மொத்தமா வாங்கல” என்னும் வசனம் இடம்பெற்றுள்ளது. மேலும் தற்போது சமூக வலைதளத்தில் மர்ம நபர்களால் காலா டீஸர் வெளியிடப்பட்டதால், படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் காலா திரைப்படத்தின் டீஸரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மெகாஹிட்டான கபாலி திரைப்படத்தின் டீஸரும் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் முன்பாக சமூகவலைதளத்தில் மர்ம நபர்களால் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து படத்தின் டீஸர் உடனடியாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.