பாய்ந்தது பாலியல் வழக்கு.. தலைமறைவான ஜானி மாஸ்டர்!
இளம் பெண் புகாரின்படி, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், ஜானி மாஸ்டர் தலைமறைவாகிவிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஹைதராபாத் : ஹேமா கமிட்டி அறிக்கையைத் தொடர்ந்து மலையாள சினிமாவின் பல்வேறு பிரபலங்கள் மீது, பாலியல் வழக்குகள் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தெலுங்கு திரைப்படத் துறையைச் சேர்ந்த நடன இயக்குநர் ஜானி மீது , முதல் பாலியல் புகார் எழுந்துள்ளது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடன இயக்குனராக இருப்பவர் ஜானி. இவர் முன்னணி நடிகர், நடிகைகள் படங்களில் பல பாடல்க ளுக்கு நடனம் அமைத்து உள்ளார்.
இந்த நிலையில் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத்தில் உள்ள ராயதுர்கா போலீஸ் நிலையத்தில் பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ளார். இதையடுத்து ஜானி மாஸ்டர் மீது போலீசார் பாலியல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், ஜானி மாஸ்டர் தலைமறைவாகிவிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் தலைமையிலான ஜ சேனா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மேலும், ஜானி மாஸ்டர் தற்போது நடன இயக்குனர்கள் சங்கத்தின் தலைவராக உள்ளார். இந்த விஷயம் வெளியே வந்ததையடுத்து அவரை இந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று நடன இயக்குநர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இளம் பெண்புகார்
புகார் மனுவில் “நான் ஜானி மாஸ்டரிடம் கடந்த ஆறு மாதங்களாக உதவி நடன இயக்குநராக பணியாற்றி வருகிறேன். வெளிப்புற படப்பிடிப்பில் என்னை பலமுறை ஜானி பாலியல் வன்கொடுமை செய்தார்.
பிறகு நார்சங்கியில் உள்ள எனது வீட்டுக்கும் அடிக்கடி வந்து தொந்தரவு செய்தார். எனக்கு தனியாக பட வாய்ப்புகள் வரவிடாமல் தடுக்கவும் செய்கிறார். உடல் ரீதியாக மட்டுமன்றி, மன ரீதியாகவும் என்னை துன்புறுத்தி காயப்படுத்தினார். மிரட்டல் விடுத்தார்” என்று கூறியுள்ளார்.