பிரபல மலையாள நடிகர் ஜெயசூர்யா என்னிடம் அப்படி நடந்துகொண்டார்: நடிகை மினு முந்நீர் பரபரப்புக் குற்றச்சாட்டு.!
திருவனந்தபுரம் : பிரபல மலையாள நடிகரான ஜெயசூர்யா தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அவரை தொடர்ந்து நடிகர்கள் முகேஷ், மணியன் பிள்ளை ராஜு, இடைவேளை பாபு உள்ளிட்டோரும் தன்னை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கியதாக நடிகை மினு முந்நீர் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும், தன்னைப் போன்று பாதிக்கப்பட்ட மற்ற பெண்களும் தங்களுக்கு நேர்ந்த கொடுமையான அனுபவங்களை வெளிப்படையாக சொல்ல முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மலையாள திரையுலகில் நிகழ்ந்துவரும் ‘மீ 2’ 2.0 வெர்ஷன் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. சமீபத்தில் வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை மலையாள திரையுலகில் பெண் கலைஞர்களுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்கள் தொடர்பான விஷயங்களை உறுதி செய்தது. இது குறித்து விசாரணை நடத்தவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வேண்டி முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு மும்மூரம் காட்டி வருகிறது. அதே நேரம் இந்த விஷயத்தில் கேரள அரசு மெத்தனம் காட்டுவதாக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் தான் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியதுபோல் நடிகை மினு முந்நீர் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டு மேலும் பல்வேறு சர்ச்சை பேச்சுகளுக்கு பிள்ளையார் சுளி போட்டிருக்கிறது. செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய அவர், மலையாள திரையுலகில் தான் நடிக்க வந்தபோது தனக்கு உடல் ரீதியாகவும், வாய்மொழி பேச்சாகவும் பல்வேறு பாலியல் தொந்தரவுகள் ஏற்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக, கடந்த 2008-ஆம் ஆண்டு பாலச்சந்திர மேனனின் ‘தே இங்கோட்டு நோக்கியே’ படப்பிடிப்பின்போது, நடிகர் ஜெயசூர்யா தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், தனது அறையில் ஆடையை சரி செய்துகொண்டிருந்தபோது அவர் தவறான நோக்கத்தோடு தன் மீது கை வைத்ததாகவும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அது மட்டும் இன்றி தனிமையில் தன்னை சந்திக்க சொல்லி வர்ப்புறுத்தியதோடு, அப்படி செய்தால் திரைத்துறையில் பல்வேறு ஆதாயங்களை நேட முடியும் என தன்னிடம் கூறியதாகவும் மினு முந்நீர் குற்றம் சாட்டியுள்ளார்.
அதேபோல், கேரளா நடிகர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் எடவேல பாபு செய்த அநாகரீக செயலை பட்டியலிட்ட மினு முந்நீர், நடிகர் சங்க அமைப்பில் உறுப்பினராக தன்னை சேர்க்க வேண்டும் என கேட்டபோது அவர் அதற்கான படிவத்தை தனது வீட்டில் வந்து பூர்த்தி செய்து தருமாறு கூறியதாகவும், அதற்காக அங்கு சென்றபோது அவர் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அதற்கு தான் ஒப்புக்கொள்ளாத நிலையில், தன்னை நடிகர் சங்க உறுப்பினராக சேர்த்துக்கொள்ளவில்லை எனவும் மினு முந்நீர் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த சூழலில்தான் தன்னைப் போன்று பாதிக்கப்பட்ட மற்ற பெண்களும் தங்களுக்கு நேர்ந்த கொடுமையான அனுபவங்களை வெளிப்படையாக சொல்ல முன்வர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவரின் இந்த கருத்து குறித்து பேசியுள்ள நடிகர் டோவினோ தாமஸ், பாலியல் குற்றங்கள் மீதான புகார்கள் ஆதாராத்துடன் உறுதி செய்யப்பட்டால் பாரபட்சம் இன்றி தண்டனை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், மலையாள திரையுலகம் மட்டும் இன்றி அனைத்து திரைத்துறையிலும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.