எனக்கும் ஜெயலலிதாவுக்கும் மனஸ்தாபம் இருந்தது…பிறந்த நாளில் மனம் திறந்த ரஜினிகாந்த்.!
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினத்தையொட்டி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிறந்த நாள் தெரிவிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில் ரஜினிகாந்த் பேசியதாவது” இன்று ஜெயலலிதா அவர்களின் 75 பிறந்த நாள். இந்த நாளில் அவர் நம்மிடம் இல்லை என்பதை வருத்தத்துடன் நினைவூட்டிக் கொள்கிறேன். ஜெயலலிதா அவர்களை போல ஒரு பெண்மணியை இப்போது பார்க்கவே முடியாது.அவர் அழகு, கம்பீரம்,அறிவு, துணிச்சல், ஆளுமை என அனைத்தையும் கொண்டவர்.
மதிப்பிற்குரிய எம்ஜிஆர் ஐயாவுக்கு புரட்சித்தலைவர் என்ற பெயர் உள்ளது. அவர் ஒரு நடிகனாக இருந்து கட்சி ஒன்றை ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்து முதலமைச்சர் ஆனார். பின் அவர் மறைந்த பிறகு அவருடைய கட்சியில் ஒரு பிளவு ஏற்பட்டபோது, பிளவுபட்ட கட்சியை திறமையான தலைவர்கள் எல்லாம் இருக்கும் போது தனி பெண்மணியாக ஒன்றாக கட்சியை இன்னும் பெரிதாக மாற்றி பல ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர் ஜெயலலிதா.
ஜெயலலிதாவை இந்தியாவில் இருக்கும் அணைத்து அரசியல் தலைவர்களும் மதித்தார்கள். அவருக்கும் எனக்கும் ஒரு காலத்தில் மனஸ்தாபம் ஏற்பட்டது. அப்போது எனக்கு ஜெயலலிதாவுக்கு எதிராக பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், அது அனைத்தையும் மறந்து ஜெயலலிதா என்னுடைய மகள் திருமணத்திற்கு அழைத்தபோது வருகை தனது வாழ்த்தினார். அவ்வளவு பெரிய கருணை உள்ளம் கொண்டவர் தான் ஜெயலலிதா ” என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.