முதன் முறையாக தல அஜித்துடன் மோத தயாராகும் எதற்கும் துணிந்த சூர்யா.!?
வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள வலிமை திரைப்படத்துடன் சூர்யா நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாக அதிக வாய்ப்புள்ளது என சினிமா வட்டாரங்களில் தகவல் கசிந்து வருகிறது.
சூர்யா நடிப்பில் கடைசியாக OTTயில் வெளியான சூரரை போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று வருகிறது. சூர்யாவின் அடுத்த படத்திற்கு தற்போதே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
சூர்யா தற்போது நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் படத்தை கடைக்குட்டி சிங்கம் பட இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்கிறார். விமல் வில்லனாக நடிக்கிறார். டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் 95 சதவீதம் நிறைவு பெற்று விட்டதாம். இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். இந்த படத்தின் ரிலீஸ் முதலில் கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகலாம் என கூறப்பட்டது.
ஆனால், தற்போது வெளியான தகவலின்படி, இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதே பொங்கல் தினத்தில் தான் அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது.
இதற்கு முன்னர், 2001 இல் பொங்கல் தினத்தை முன்னிட்டு அஜித்தின் தீனா படமும் விஜய், சூர்யா நடித்த பிரண்ட்ஸ் திரைப்படமும் வெளியானது. அதற்கடுத்து, 2003 தீபாவளி தினத்தன்று ஆஞ்சநேயா திரைப்படமும், விக்ரம், சூர்யா இணைந்து நடித்த பிதாமகன் திரைப்படமும் வெளியானது.
ஆனால், சூர்யா தனியாக நடித்து, தல அஜித் படத்துடன் இணைந்து வெளியிட்டதில்லை. இந்த பொங்கலுக்கு அந்த குறை தீருமா என பார்க்கலாம்.