அடுத்த டார்கெட்… ‘புஷ்பா 2’ படத்தின் இயக்குநர் வீட்டில் ஐடி ரெய்டு.!
ஐதராபாத்தில் உள்ள புஷ்பா இயக்குநர் சுகுமாரின் வீடு மற்றும் அலுவலகத்தில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுவருகிறார்கள்.

ஹைதராபாத்: ‘புஷ்பா 2’ திரைப்பட இயக்குநர் சுகுமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஹைதராபாத் ஏர்போர்ட்டில் இருந்து சுகுமாரை அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். அதேபோல், அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தொடர்புடைய இடங்களிலும் ரெய்டு நடந்து வருகிறது.
சுகுமாரின் வீட்டில் சோதனைகள் அதிகாலையில் தொடங்கி பல மணி நேரம் நீடித்ததாக சொல்லப்படுகிறது. இந்த ரெய்டு குறித்து இயக்குநர் சுகுமார் இதுவரை பதில் அளிக்கவில்லை. நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய வேடங்களில் நடித்துள்ள புஷ்பா 2 படம் இந்திய அளவில் ரூ.1200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
இருப்பினும், இந்த ரெய்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இந்த சோதனை குறித்து வருமான வரித்துறை சார்பிலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. முன்னதாக, வாரிசு, கேம் சேஞ்சர் படங்களை தயாரித்த தில் ராஜூவுக்கு தொடர்புடைய 8 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தில் ராஜுவின் வீடு, அவரது மகள் வீடு, அவரது அலுவலகங்கள் மற்றும் பிற உறவினர்களின் வீடுகள் உட்பட அவர் தொடர்பான எட்டு இடங்களில் சோதனை நடத்தப்பட்டன. இந்த சோதனை குறித்தும் வருமான வரித்துறை சார்பில், எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.