பாடகி பவதாரிணி மறைவு! ‘தி கோட்’ படப்பிடிப்பு ரத்து!
பிரபல பின்னணி பாடகியும், இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி நேற்று (ஜனவரி 25) ஆம் தேதி காலமானார். இவர் கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இலங்கையில் சமீபத்தில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.
இதனையடுத்து, சிகிச்சை பலனின்றி நேற்று (ஜனவரி 25)-ஆம் தேதி இலங்கையில் காலமானார். இவருடைய மறைவு சினிமாத்துறையில் பெரும் சோகத்தையும். அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
#RIPBhavatharini: ஜிவி முதல் ஹாரிஸ் வரை பவதாரிணி பாடிய ஹிட் பாடல்கள்!
இதனையடுத்து பவதாரிணி மறைவால் தி கோட் படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது விஜய்யை வைத்து தி கோட் படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், பாடகி பவதாரிணி மறைவு செய்தியை கேட்டவுடன் சகோதரர்கள் வெங்கட் பிரபு, யுவன் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். பாடகி பவதாரிணியின் உடலை இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக சகோதரர் யுவன் சங்கர் ராஜா இலங்கை புறப்பட்டுள்ளார். சகோதிரியை இழந்துவாடும் வெங்கட் பிரபுவுக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு விஜய் ‘தி கோட் ‘ படத்தின் படப்பிடிப்பை இன்று ரத்து செய்துள்ளதாகவும் நிலைமை எல்லாம் சரியான பிறகு தொடங்கலாம் எனவும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், பவதாரிணியின் உடல் இன்று மாலை இலங்கையில் இருந்து சென்னைக்கு கொண்டு வர இருக்கிறது. அஞ்சலிக்காக முருகேசன் தெரு தி நகரில் உள்ள இருக்கும் இளையராஜா வீட்டில் வைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பவதாரிணியின் இறுதிசடங்கு நாளை காலை நடைபெறும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளது.