“உங்க அப்பா பேர காப்பாத்தலையா?” மனோஜ் மரணத்திற்கு இதுதான் காரணம் – தம்பி ராமையா உருக்கம்!
மனோஜ் பாரதிராஜா மன அழுத்தம் காரணமாக தான் உயிரிழந்தார் என தம்பி ராமையா வேதனையுடன் பேசியுள்ளார்.

சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் நேற்று காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையை உலுக்கியுள்ள நிலையில், அவருடைய உடல், நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரைத் துறையினர் திரண்டு வந்து இறுதி மரியாதை செலுத்தியும் வருகிறார்கள்.
ஏற்கனவே, நடிகர் சூர்யா, நடிகர் பிரபு, த.வெ.க தலைவர் விஜய், உள்ளிட்ட பலரும் நேரில் சென்று தங்களுடைய அஞ்சலியை செலுத்தினார்கள். அவர்களை தொடர்ந்து நடிகர் தம்பி ராமையாவும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பிறகு பேசிய அவர் ” இன்றைய நாளில் 80 வயதுகளை தாண்டி மகன் இறந்த தூக்கத்தை பாரதிராஜா தங்குவது மிகப்பெரிய வேதனையான விஷயம். எப்படி இறைவனுக்கு இப்படி மனசு வருகிறது என்று எனக்கு ஆண்டவன் மீது கோபம் வருகிறது. மகன் இறப்பை தாங்கிக்கொள்ளமுடியாமல் இருக்கும் பாரதிராஜாவை பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது அவரை பார்க்க கூட முடியவில்லை. அவரை பற்றி பேசவே வேண்டாம்.
அப்படி அவரை பற்றி பேசவேண்டும் என்றால் பாரதி ராஜா…பாரதி ராஜா என்று பலநூறு வருடங்கள் பேசிக்கொண்டு இருக்கலாம். ஒரு மாபெரும் மனிதனுக்கு பிள்ளையாக பிறந்தது மட்டும் தான் மனோஜின் மன அழுத்தத்திற்கு காரணம் என்று நான் நினைக்கிறேன். தம்பி மனோஜும் முரளி சாரும் ஒன்றாக படத்தில் நடித்தபோது என்னிடம் முரளி சார் அவரை பற்றி நிறையவே சொல்லியிருக்கிறார்.
இவனிடம் பல திறமைகள் உள்ளது பல கனவுகள் உள்ளது அதனை எப்படி வெளிக்கொண்டு வருவது என்று தெரியாமல் இருக்கிறார் என்று சொல்வார். முரளி சார் 45, 46 வயதில், மோனோஜ் தம்பி 48 வயதில் இறந்தது பெரிய வருத்தமாக உள்ளது. இந்த 48 வயதில் அவருக்கு எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும்? 2 பெண் பிள்ளைகளும் தந்தையை எப்படி வைத்து பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டிருப்பார்கள்?
ஒவ்வொரு நாளும் எப்படி விடிகிறது என்று சொல்ல முடியவில்லை. இந்த நேரத்தில் நம்மளுடைய அடுத்த தலைமுறைகள் புரிந்துகொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால் ஒரு விஷயம் நமக்கு வரவில்லை என்றால் அதனைவிட்டு விட்டு அடுத்த நகர்வுக்கு செல்லவேண்டும் என்பது தான். ஒரு பெரிய மனுசனுக்கு பிள்ளையாக பிறந்துவிட்டார் என்றாலே இப்போது என்னப்பா செய்யுற? அடுத்து எதுவும் வேலை செய்யவில்லையா? உங்க அப்பா பெயரை காப்பாற்றவில்லையா? என இந்த சமுகம் அழுத்தம் கொடுக்கிறது. இதனுடைய அழுத்தம் தான் மனோஜிற்கு மாரடைப்பு ஏற்பட காரணம் ” எனவும் தம்பி ராமையா பேசியிருக்கிறார்.