தமிழ் சினிமாவில் இந்த பிரச்சனை இல்லையா? ஜீவா பேச்சுக்கு கடுப்பான சின்மயி!
சென்னை : நடிகர் ஜீவா தமிழ் சினிமாவில் பாலியல் தொந்தரவு பிரச்சனைகள் இல்லை என கூறிய நிலையில், அவரிடம் பாடகி சின்னமயி கேள்வி எழுப்பியுள்ளார்.
மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதில் இருந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் பற்றி வெளிப்படையாக பேசி வருகிறார்கள். இந்த சூழலில், தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்களும் நடிகைகள் தைரியமாக பேசுவதற்கு முன் வரவேண்டும் எனவும், தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ஒரு சில, பிரபலங்கள் இதனைப்பற்றி பேசவே மறுத்தும் தெரியாது எனவும் கூறி வருகிறார்கள். குறிப்பாக, நடிகர் ரஜினிகாந்த் கூட ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி தெரியாது என கூறியிருந்தார். அவரைத்தொடர்ந்து நடிகர் ஜீவாவும் ஹேமா கமிட்டி குறித்த கேள்விக்கு கடுப்பாகி பத்திரிக்கையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு இருந்தார். கடைதிறப்பு விழாவிற்கு வருகை தந்த ஜீவாவிடம் கேரளா சினிமாவில் நடக்கும் விஷயங்களை பற்றி கேள்வி எழுப்பபட்டது.
அப்போது, நல்ல விஷயத்திற்கு வந்தபோது அதனை பற்றி மட்டும் கேளுங்கள்…மலையாள சினிமாவில் அப்படி நடப்பது தவறான விஷயம் தான். ஆனால், தமிழ் சினிமாவில் அந்த மாதிரி பிரச்சனைகள் நடக்கவில்லை” என ஜீவா பேசியிருந்தார். ஜீவா பேசியவுடன் நீங்கள் ஒரு நடிகர் என்பதால் தான் இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறோம் என செய்தியாளர் பேச அதற்கு ஜீவா கடும் கோபத்துடன் அதுக்கு தான் நான் பதில் சொல்லிவிட்டேனே என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், ஜீவா தமிழ் சினிமாவில் இதுபோன்ற பிரச்சனைகள் இல்லை என்று கூறியதை பார்த்த பாடகி சின்மயி சற்று கடுப்பாகி, தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் “தமிழ்த் துறையில் பாலியல் துன்புறுத்தல் இல்லை என்று எப்படிச் சொல்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை” என அவரிடம் கேள்விகளை எழுப்பியுள்ளார். இவருடைய பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், சின்னமயி கூறியதை பார்த்தால் தமிழ் சினிமாவிலும் அது போன்ற பிரச்சனைகள் நிறையவே இருக்கிறது போல எனவும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.