“வசூலை விட அதைப்பார்த்து மகிழ்ச்சியடைகிறேன்”..லப்பர் பந்து படத்தால் நெகிழ்ந்த ஹரிஷ் கல்யாண்!!
லப்பர் பந்து படத்தின் வசூலை பார்த்து மகிழ்ச்சியடைவதை விட மக்கள் கொடுக்கும் வரவேற்பை பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறேன் என படத்தின் வெற்றி விழாவில் ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.
சென்னை : இப்போது எங்குப் பார்த்தாலும் “லப்பர் பந்து” திரைப்படத்தைப் பற்றித் தான் பேசி வருகிறார்கள். அந்த அளவுக்கு அருமையான படத்தை இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து கொடுத்திருக்கிறார். படம் வெளியான போது பெரிய அளவுக்கு எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியானது. அதன்பிறகு, படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்த காரணத்தால் நாளுக்கு நாள் வரவேற்பு குவிந்து வருகிறது.
5 கோடி பட்ஜெட்டில் எளிமையாக, எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 10 கோடி வரையும், உலகம் முழுவதும் 14 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வெளியான சில நாட்களிலே படத்தினை எடுக்கச் செலவு செய்த தொகையைப் படம் மீட்டெடுத்துள்ள காரணத்தால் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
படம் வெற்றியடைந்ததைக் கொண்டாடும் வகையில், படத்திற்கான வெற்றி விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஹரிஷ் கல்யாண் படத்திற்குக் கிடைத்து வரும் வரவேற்புக்கு நன்றி தெரிவித்தும், படத்தின் வசூலை விடக் கிடைத்து வரும் வரவேற்பைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்தார்.
இது குறித்துப் பேசிய அவர் ” லப்பர் பந்து படத்துக்கு மக்கள் கொடுத்து வரும் ஆதரவைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்திற்கு வசூல் கிடைத்து வரும் தகவலைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்ததை விடப் படம் பார்க்க மக்கள் திரையரங்கத்துக்கு வந்து அவர்கள் கொடுக்கும் வரவேற்பில் தான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். படத்தைப் பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறோம் என ரசிகர்கள் கூறும்போது தான் நான் வெற்றிபெற்றதாக நினைக்கிறேன்” என நெகிழ்ச்சியாகத் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக ஹரிஷ் கல்யாண் நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அதற்கு உதாரணமாகச் சொல்லவேண்டும் என்றால் லப்பர் பந்து படத்துக்கு முன்னதாக அவர் பார்க்கிங் படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் விமர்சன ரீதியாகப் பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது, லப்பர் பந்து படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.