இளையராஜாவின் வக்கீல் நோட்டீஸ்.. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர் விளக்கம்.!
இளையராஜா : பாடல்கள் மீது இசையமைப்பாளர் உரிமை கோர முடியாது என இளையராஜாவின் வக்கீல் நோட்டீஸுக்கு தயாரிப்பாளர் வினோத் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
மலையாளத்தில் இயக்குனர் சிதம்பரம் இயக்கிய “மஞ்சும்மல் பாய்ஸ்” திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் குணா படத்தில் வரும் “கண்மணி அன்போடு காதலன்” என்ற பாடலை படக்குழு பயன்படுத்தியது. இந்த பாடல் இடம்பெற்றிருந்தது காரணமாக படம் தமிழிலும் சக்கை போடு போட்டது.
இந்நிலையில், குணா பட பாடலின் இசையமைப்பாளர் இளையராஜா, அந்த பாடலைப் பயன்படுத்த தன்னிடம் அனுமதி பெறாததற்காக மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்களுக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
இளையராஜா வக்கீல் நோட்டீஸில் , “பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் பதிப்புரிமை சட்டப்படி பாடலின் முழு உரிமையாளர் என்பதால், முறையாக அனுமதி பெற்று உரிமை பாடலை பயன்படுத்த வேண்டும். பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக 15 நாட்களுக்குள் இழப்பீடு வழங்க வேண்டும்” என்றும் நோட்டீஸில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
தற்போது, இளையராஜாவின் சட்டப்பூர்வ நோட்டீசுக்கு பதிலளிக்கும் வகையில், காப்புரிமைச் சிக்கலைத் தெளிவுபடுத்தினார் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷான் ஆண்டனி.
இது தொடர்பாக அவர் அளித்த விளக்கத்தில், “பதிப்புரிமை பெற்ற இரண்டு இசை நிறுவனங்களிடமிருந்து பாடலின் உரிமையைப் பெற்றதாக கூறிய அவர், இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. இந்த புகார் தேவையற்ற புகார் என்றும், இந்த பிரச்னைகளுக்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” கேட்டுக் கொண்டார்.
இளையராஜா தனது பாடல்களைப் பயன்படுத்தியதாக கூறி, முன்னதாக சில படங்களுக்கு இதேபோன்ற குற்றசாட்டுக்களை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.