மற்றவர்களை கவனிப்பது என்னோட வேலை இல்லை! விமர்சனங்கள் குறித்து இளையராஜா!
சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்தி வருவதாக கூறி வழக்கு தொடர்ந்தபோதும், ரஜினியின் கூலி டீசரில் வரும் இசையையும் தன்னுடைய அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக நோட்டீஸ் அனுப்பியதால் சிலர் இளையராஜாவை விமர்சித்தனர்.
இந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இசையமைப்பாளர் இளையராஜா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசிய இளையராஜா ” நான் தினமும் கேள்வி படுகிறேன். என்னை பற்றி எதோ ஒரு வகையில், இது மாதிரியான வீடியோக்கள் நிறைய வீடியோ வந்துகிட்டு இருக்கு என்ற செய்தியை வேண்டியவர்கள் என்னிடம் சொல்கிறார்கள்.
ஆனால், நான் இதில் எல்லாம் கவனம் செலுத்துவதே இல்லை. ஏனென்றால் மற்றவர்களை கவனிக்கவேண்டியது என்னுடைய வேலை இல்லை. என்னுடைய வேலையை கவனிக்கிறது தான் என்னுடைய வேலை. நான் என்னுடைய வேலையில் ரொம்ப சுத்தமாக போய்க்கொண்டு இருக்கிறேன். நீங்கள் என்னை வாழ்த்தி கொண்டு இருக்கின்ற நேரத்திலே, கடந்த ஒரு மாதத்தில் சிம்பொனியை எழுதி முடித்துவிட்டேன்.
இடையில் சில நிகழ்ச்சிகளில் தலைகாட்டி விட்டு வந்தாலும் 35 நாட்களில் ஒரு சிம்பொனியை எழுதி முடித்துவிட்டேன். முழுவதுமாக 4 மூவ்மென்ட்ஸ் உள்ள சிம்பொனியை முடித்துவிட்டேன். இந்த சந்தோஷமான செய்தியை என்னுடைய ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறியுள்ளார்.
— Ilaiyaraaja (@ilaiyaraaja) May 16, 2024