“அந்த படத்தை பார்த்திருந்தால் கோட் இன்னும் நல்லா வந்துருக்கும்”…வெங்கட் பிரபு ஓபன் டாக்!
ராஜதுரை படத்தை முன்பே பார்த்திருந்தால் கோட் படத்தை இன்னுமே சிறப்பாக எடுத்திருப்பேன் என இயக்குநர் வெங்கட் பிரபு சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
சென்னை : விஜய் நடிப்பில் வெளியான ‘GOAT’ படம் உலகம் முழுவதும் 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளது. இந்த படம் வெளியான சமயத்தில், இந்த படம் இதற்கு முன்பு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ராஜதுரை படத்தினுடைய காப்பி என விமர்சிக்கப்பட்டது.
இரண்டு படத்தினுடைய கதையம்சம் சில விஷயங்களில் ஒத்துப்போன காரணத்தால் இப்படியான விமர்சனங்கள் எழுந்தது. இந்த விமர்சனங்களை இயக்குநர் வெங்கட் பிரபுவும் பார்த்திருக்கிறார். அதனைப்பார்த்துவிட்டு அந்த சமயம் எதுவும் பதில் அளிக்கவில்லை. ஆனால், படம் வெளியாக்க ஹிட் ஆன பிறகு தற்போது மனம் திறந்து பேசியுள்ளார்.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெங்கட் பிரபு இது குறித்துப் பேசியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர் ” நானும் சமூக வலைத்தளங்களில் பார்த்தேன். கோட் படம் ராஜதுரை படத்தைப் பார்த்துத் தான் எடுக்கப்பட்ட திரைப்படம் என்று. ஆனால், கோட் படத்தை இயக்கி முடிக்கும் வரை நான் அந்த படத்தைப் பார்க்கவே இல்லை.
இப்படியான பேச்சுக்கள் வந்த பிறகு தான் படத்தைப் பார்க்க முடிவு செய்து அந்த படத்தைப் பார்த்தேன். கோட் படம் வெளியாவதற்கு முன்பே இந்த படத்தைப் பார்த்திருந்தேன் என்றால் நிச்சயமாக இன்னுமே கோட் படத்தைச் சிறப்பாக எடுத்திருப்பேன். அப்பா -மகன் கதை என்பது புதிதான விஷயம் இல்லை. இது உலகளாவிய கதைக்களம் தான்.இப்படியான பல படங்களைப் பார்த்து இருக்கிறேன். ஆனால், எப்படியோ ராஜதுரை படத்தைப் பார்க்கத் தவறவிட்டுவிட்டேன்” எனவும் தன்னுடைய பாணியில் மிகவும் கூலாக பேசினார்.