விடுமுறை இல்லைனா வேட்டையன் கதி அவ்வளவு தான்! விமர்சித்த பிரபல இயக்குநர்!
வேட்டையன் படத்தின் திரைக்கதை சரியாக இல்லை என இயக்குநர் பிரவீன் காந்தி யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விமர்சித்துப் பேசியுள்ளார்.
சென்னை : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள வேட்டையன் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. விமர்சனங்கள் கலவையாக இருப்பதற்கு முக்கியமான காரணம் படத்தின் திரைக்கதை சரியாக இல்லை என்பதற்காக தான். விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.
படத்தின் முதல் நாளில் உலகம் முழுவதும் 70-வது கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும், தமிழகத்தில் மட்டும் 25 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும்,விமர்சனங்கள் கலவையாக வருவதால் படம் ஜெயிலர் அளவுக்கு வசூல் செய்யுமா என்பது சந்தேகம் தான்.
மக்கள் பலரும் படத்தைப் பார்த்துவிட்டு தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருவது போல பிரபலங்கள் பலரும் தங்களுடைய விமர்சனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், ரட்சகன், நட்சத்திரம், ஜோடி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் பிரவீன் காந்தி வேட்டையன் படம் பார்த்துவிட்டு திரைக்கதை சரியாக இல்லை என படத்தை விமர்சித்து பேசியுள்ளார்.
தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர் ” வேட்டையன் படத்தின் முதல் நாள் முதல் காட்சியைத் திரையரங்குக்குச் சென்று பார்த்துவிட்டேன். கண்டிப்பாகப் படத்தை ரஜினி ரசிகர்கள் தொடர்ச்சியாக விடுமுறை என்பதால் பார்ப்பார்கள். ஆனால், சினிமா ரசிகர்கள் கண்டிப்பாகத் தொடர்ச்சியாக இந்த படத்திற்குப் போகமாட்டார்கள்.
படம் அந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது. படத்தில் ரஜினிகாந்துடய நடிப்பை பற்றி குறை சொல்ல முடியாது. நான் ஆரம்பத்திலிருந்து ரசித்த அதே ரஜினி குறையில்லாமல் படத்தில் நடித்திருக்கிறார். குறை எங்கு இருக்கிறது என்றால் படத்தின் கதை மற்றும் திரைக்கதையில் தான். இரண்டு சரியாக இல்லை. படத்தில் ரஜினியைத் தாண்டி பஹத் பாசில், ராணா அனிருத் இசை இருக்கிறது.
அது எல்லாம் இருந்தும் கூட வேட்டையன் கோட்டை விட்டுள்ளது. தொடர்ச்சியாக விடுமுறை என்பதால் படம் எடுக்கப்பட்ட செலவு செய்த தொகையை எடுத்துவிடும். விடுமுறை இல்லை என்றால் நிச்சயமாக வசூல் செய்திருக்காது” எனவும் இயக்குநர் பிரவீன் காந்தி தெரிவித்துள்ளார்.