இனிமே ஹீரோவாதான் நடிப்பேன்! ஆதங்கத்துடன் முடிவை கூறிய கலையரசன்!
ஒரு படத்திற்கு கதை எழுதும் போதே சாக போகிறதென்றால் என் பெயரை எழுதி விடுவார்கள் என நினைப்பதாக கலையரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை : கலையரசன் ஒரு சிறந்த நடிகர் என பாராட்டு வாங்குவது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு முக்கிய காரணமே அவர் ஹீரோவாக மட்டும் படங்களில் நடிக்காமல் கதைக்கு தேவைப்பட்டால் முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது தான். அப்படி நடித்தாலும் அவருடைய கதாபாத்திரம் படத்தில் இறந்துவிடுவது போல அமைந்துவிடும்.
குறிப்பாக மெட்ராஸ், வாழை உள்ளிட்ட படங்களில் அவருடைய கதாபாத்திரம் இறந்தது போல காட்டப்பட்டிருக்கும். இதனை வைத்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் கூட செய்து கலாய்த்து வந்தனர். இதனையடுத்து, இனிமேல் நடித்தால் ஹீரோவாக நடிக்க தான் கலையரசன் முடிவு செய்துள்ளதாக வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
அவர் நடித்துள்ள மெட்ராஸ்காரன் படத்தின் ப்ரோமோஷன் விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய கலையரசன் ” மலையாள சினிமாவில் பல நடிகர்கள் நல்ல படங்கள் வந்தால் அதில் தயங்காமல் இரண்டாவது ஹீரோவாகவும், முக்கியமான கதாபாத்திரத்தில் கூட நடிக்கிறார்கள். அடுத்ததாக அவர்கள் ஹீரோவாகவும் படங்களில் நடிக்கிறார்கள். தமிழ் சினிமாவிலும் அப்படி இருக்கிறது. ஆனால், குறைவான நடிகர்கள் தான் அப்படி நடிக்கிறார்கள்.
நானும் அப்படி நடிப்பது பிடித்து தான் நடிக்கிறேன். ஆனால், தொடர்ச்சியாகவே அதே போலவே கதாபாத்திரங்கள் வருகிறது. அறிமுகமாக ஹீரோ வந்தால் கூட அந்த படத்திலும் எனக்கு அப்படியான கதாபாத்திரங்கள் தான் கொடுக்குகிறார்கள். கதை எழுதும்போதே சாவு என்று ஒரு கதாபாத்திரம் வந்தால் என்னுடைய பெயரை எழுதிவிடுகிறார்கள் என்று நினைக்கிறன்.
இனிமேல் நான் தெளிவான ஒரு முடிவை எடுத்திருக்கிறேன். அது என்ன முடிவு என்றால் நடித்தால் ஹீரோவாக நடிக்கவேண்டும் என்பது தான். கதைக்கு தேவையான கதாபாத்திரங்கள் வந்தது என்றால் அதிலும் நடிப்பேன். ஆனால், இனிமேல் முக்கியதுவம் இருக்கும் கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்க திட்டமிட்டு இருக்கிறேன்” எனவும் கலையரசன் தெரிவித்தார்.