அம்மா இறந்த அன்று நான் நடிக்க போனேன்! காமெடி நடிகர் ரோஷன்ராஜ் வேதனை!
தமிழ் சினிமாவில் கவுண்டமணி, வடிவேலு, செந்தில், சந்தானம் உள்ளிட்ட பலருடைய படங்களில் காமெடியான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் ரோஷன்ராஜ் கிருஷ்ணா. இவரை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு கம்மி என்று கூட கூறலாம். ஏனென்றால், நன்றாக நடிக்க தெரிந்த இவருக்கு இன்னும் பெரிய அளவில் பெரிய கதாபாத்திரம் எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
இவர் என்றென்றும் புன்னகை, டிக்கிலோனா உள்ளிட்ட படங்களில் இவர் நடித்த காட்சிகள் மக்களை சிரிக்க வைத்தது. ஆனால், இவர் சிறிய வயதில் இருந்தே பல படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி, படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு மிகவும் அவமானமும் பட்டிருக்கிறாராம். இதனை பேட்டி ஒன்றில் அவரே வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
அதைப்போல, தன்னுடைய தாய் இறந்த அன்று கூட உடலை வைத்துவிட்டு ஒரு காமெடி காட்சியில் நடிக்க சென்றதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் “நான் ஒரு முறை சீரியலில் நடித்து கொண்டிருந்த சமயத்தில் என்னுடைய காட்சியை எடுக்க அந்த தினத்தில் நான் வந்தே ஆகவேண்டும் என்று கூறிவிட்டார்கள்.
அந்த நாளில் தான் என்னுடைய அம்மா காலமானார். பிறகு அம்மாவின் உடலை அப்படியே போட்டுவிட்டு நான் அந்த படத்தில் நடிக்க சென்றேன். நான் தான் அங்கு இருக்கனும் ஆனால், நான் போய் நடித்துவிட்டு வந்தேன். அந்த சமயம் எனக்கு பல டிவி தொடர்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.
சீரியல் என்பதால் தினமும் ஷூட்டிங் இருக்கும் எனவே அவர்கள் மீதும் நாம் குறை சொல்ல முடியாது. அம்மா இறந்த நாள் அன்று நான் அங்கு சென்று காமெடி செய்தேன். இந்த சம்பவம் தான் நான் என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு சம்பவம்” என மிகவும் வருத்தத்துடன் நடிகர் ரோஷன்ராஜ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து சில காரணங்களால் அந்த படங்களில் நடிக்க முடியாமல் போய்விட்டதாகவும் அவர் தெரிவித்தார். அப்படி அலைகள் ஓய்வதில்லை , பன்னீர் புஷ்பங்கள் மற்றும் கிழக்கே போகும் ரயில் ஆகிய படங்களில் ஹீரோவாக தான் தான் நடிக்கவிருந்ததாகவும், பிறகு வேறொருவருக்கு பட வாய்ப்புக்கு சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.