“அந்த தொந்தரவால் மலையாள சினிமாவை விட்டு ஓடிட்டேன்”! நடிகை சுபர்ணா ஆனந்த் வேதனை!
புதுடெல்லி : காஸ்டிங் கவுச் பிரச்சனை காரணமாக மலையாள சினிமாவை விட்டு விலகியதாக நடிகை சுபர்ணா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவில் தற்போது பரபரப்பாகப் போய்க்கொண்டு இருக்கும் பாலியல் புகார் பற்றி பல நடிகைகள் தைரியமாக முன் வந்து தங்களுக்கு நடந்த கசப்பான அனுபவங்களைப் பற்றிப் பேசி வருகிறார்கள். நடிகைகள் கொடுக்கும், புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, பிரபல மலையாள நடிகரும், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவுமான முகேஷ் மீது, கொச்சியில் உள்ள மரடு காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அவரைப்போல, நடிகர் ஜெயசூர்யா மற்றும் கழிவறையில் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக நடிகை அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவர் மீது திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகர் சித்திக் மீது 8 ஆண்டுகளுக்கு முன்பு ஹோட்டல் ஒன்றில் நடிகையை பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, அவர் திருவனந்தபுரம் அருங்காட்சியக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த சுழலில், நடிகைகள் பலரும் நடிகர்களின் பெயர்களைக் கூற மறுத்து தங்களுக்கு நடந்த அந்த கசப்பான அனுபவங்களைப் பற்றிப் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில், மலையாளத்தில் வைஷாலி, நாம் கந்தர்வன் போன்ற ஒரு சில படங்களில் நடித்துப் பிரபலமான நடிகை சுபர்ணா ஆனந்த் டெல்லியில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், மலையாள சினிமாவை விட்டு விலகிய கசப்பான சம்பவங்கள் பற்றி வேதனையுடன் பேசியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர் ” இப்போது நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவுகள் பற்றி வெளிப்படையாக வெளிவந்து தைரியமாகப் பேசுவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த சமயம், இது போன்ற சம்பவங்களை வெளியேறிச் சொல்ல முடியவில்லை. எனக்கும் மலையாள சினிமாவில் நடிக்கவேண்டும் என்பது ரொம்பவே ஆசையாக இருந்தது.
ஒரு சில படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதன் பிறகு காஸ்டிங் கவுச் போன்ற பிரச்சனைகள் ரொம்பவே அதிகமாக இருந்த காரணத்தால், நான் மலையாள சினிமாவை விட்டு, விலக நினைத்தேன். ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகும்போது எனக்கும் இதுபோன்ற பிரச்சனைகள் வந்தது. ரொம்பவே வேதனையாக அந்த படத்தில் இருந்து விலகி மலையாள சினிமாவை விட்டு ஓட முடிவெடுத்தேன் எனவும் வேதனையுடன் நடிகை சுபர்ணா ஆனந்த் தெரிவித்தார்.
பாலியல் வழக்கில் சிக்கியுள்ள, எம்எல்ஏ முகேஷ் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வரும் நிலையில், நடிகை சுபர்ணா ஆனந்த்தும் முகேஷ் கண்டிப்பாகப் பதவி விலகவேண்டும். அவரை போல ஒருவர் தப்பிக்கவே கூடாது அவருக்குத் தண்டனை கிடைக்கவேண்டும் எனவும் வலியுறுத்திக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் மோகன் லால் போன்ற மீத நடிகர்கள் இந்த பிரச்சனைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் அமைதியாக இருப்பது மிகவும் ஆச்சரியமளிக்கிறது எனவும் கூறினார்.