“எனக்கும் அந்த உயிரிழப்புக்கு நேரடி தொடர்பு இல்லை” அல்லு அர்ஜுன் பரபரப்பு பேட்டி!
எனக்கும் அந்த பெண் உயிரிழப்புக்கும் நேரடி தொடர்பு இல்லை. இந்த சம்பவம் குறித்து மேலும் பேச விரும்பவில்லை என நடிகர் அல்லு அர்ஜுன் பேட்டியளித்துள்ளார் .
ஹைதிராபாத் : டிசம்பர் 5ஆம் தேதி புஷ்பா 2 ரிலீஸ் சமயத்தில் படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் ஹைதிராபாத் சந்திரா திரையரங்கிற்கு சென்றிருந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். இது குறித்து சிக்கட்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்திருந்தனர்.
இந்த கைது நடவடிக்கைக்கு பிறகு நாம்பள்ளி நீதிமன்றம் அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்தது. இந்த நீதிமன்ற காவலை அடுத்து ஹைதிராபாத் உயர்நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் கோரப்பட்டு இன்று காலை நீதிமன்ற காவலில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார் நடிகர் அல்லு அர்ஜுன்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அல்லு அர்ஜுன், எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி, இறந்தவர் குடும்பத்திற்கு மீண்டும் எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவர்களுக்கு துணையாக இருப்பேன் என தெரிவித்து இருந்தார்.
அதனை அடுத்து தற்போது மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த அல்லு அர்ஜுன், ” உயிரிழந்தவரின் குடும்பத்திற்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம். அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய நான் உள்ளேன். திரையரங்கிற்குள் குடும்பத்துடன் நான் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். வெளியில் இந்த விபத்து நடந்தது. அதற்கும் எனக்கும் நேரடித் தொடர்பு இல்லை.
இது முற்றிலும் எதிர்பாரா விபத்து. கடந்த 20 வருடங்களாக நான் இந்த சந்தியா திரையரங்கிற்கு படம் பார்க்க சென்று வருகிறேன். அதே இடத்திற்கு இதுவரை 30 முறைக்கு மேல் சென்றுள்ளேன். இதுவரை இதுபோன்ற விபத்து நடந்ததில்லை. நான் ஏதேனும் கூறினால் அது வழக்கை சீர்குலைக்கும் என்பதால், இந்த வழக்கு குறித்து நான் எதையும் நான் கூற விரும்பவில்லை.” என நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.