தேசிய விருதை நினைத்து கூட பார்க்கவில்லை.! சூரரைப்போற்று பொம்மி ஓபன் டாக்.!
சினிமாவில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு வருடம் தோறும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் நேற்று மாலை 68- வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது.
இதில் தமிழில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு 5 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சிறந்த படம் – சூரரைப்போற்று, சிறந்த நடிகர்- சூர்யா, சிறந்த நடிகை – அபர்ணா பால முரளி, சிறந்த பின்னணி இசை – ஜிவி பிரகாஷ், சிறந்த திரைக்கதை – சுதா கொங்கரா,மற்றும் ஷாலினி உஷா நாயர் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதில் மிக முக்கியமாக கருதப்படும் சிறந்த நடிகைக்கான விருது சூரரை போற்று திரைப்படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை அபர்ணா பாலமுரளிக்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், தேசிய விருது வென்றதை குறித்து நடிகை அபர்ணா பாலமுரளி ஒரு நேர்காணலில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அதில் “நான் உண்மையாக எனக்கு விருது கிடைக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை. தேசிய விருதுகள் பட்டியல் நேற்று மாலை அறிவிக்கும் போதுகூட எனக்குக் கிடைக்கும் என்று நினைக்கவே இல்லை. தேசிய விருதில் என்னுடையப் பெயரைப் பார்த்ததும் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
என்னோட குடும்பத்தினர், என் நண்பர்கள் அனைவரும் இதற்காக மிகவும் சந்தோஷப்பட்டார்கள். இவை அனைத்திற்கும் காரணம் படத்தில் நடிக எனக்கு வாய்ப்புக்கு கொடுத்த இயக்குநர் சுதா கொங்கராதான். இந்தப் பெருமை அவரைத்தான் சேரும். மேலும் சூர்யா சாருக்கு , ஜி.வி பிரகாஷ், சுதா கொங்கரா ஆகியோருக்கு விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என நெகிச்சியுடன் பேசியுள்ளார் அபர்ணா பாலமுரளி.