ஆணவக்கொலை வன்முறை அல்ல, பெற்றோரின் அக்கறை! சர்ச்சையை கிளப்பிய ரஞ்சித்!
சேலம் : ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி வெளியானது. படம் வெளியானதை தொடர்ந்து சேலம் மாவட்டம் கருப்பூரில் உள்ள திரையரங்கில் ரஞ்சித் ரசிகர்களுடன் படம் பார்த்தார். படம் பார்த்து முடித்த பிறகு வெளிய வந்து செய்தியாளர்களை சந்தித்த ரஞ்சித் ஆணவக்கொலை பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
செய்தியாளர்கள் சந்திப்பின் போது செய்தியாளர் ஒருவர் ஆணவ படுகொலைக்கு எதிராக நீங்க என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த ரஞ்சித் ” ஆணவக்கொலை என்பது எமோஷன் என்று சொல்வேன். ஆணவக்கொலை பற்றி நான் இந்த கவுண்டம்பாளையம் படத்தில் தீர்வாக தான் சொல்லியிருக்கிறேன். பெற்ற அம்மா அப்பாவுக்கு தான் அதனுடைய வேதனை தெரியும்.
உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் நம்மளுடைய பைக்கை ஒருவன் திருடி சென்றுவிட்டான் என்றால் உடனடியாக அவனை போய் ஒரு கோபத்தில் அடித்து விடுகிறோம். அப்படி இருக்கையில், நம்மளுடைய வாழ்க்கையே நம்மளுடைய பிள்ளை தான் அப்படி இருக்கும்போது குழந்தையின் எதிர்காலத்திற்கு பாதிப்பு இருக்கும்போது பெற்றோர்கள் கோபப்பட்டு அந்த மாதிரி ஒரு முடிவு எடுக்கிறார்கள்.
அந்த முடிவும் ஒரு அக்கறை தான். அது வன்முறை அல்ல, அது ஒரு கலவரம் அல்ல, எது நடந்தாலும் நல்லதோ கெட்டதோ, எல்லாமே அக்கறையின் காரணமாக தான் நடக்கிறது” எனவும் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்கவேண்டும் அதற்காக தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பில் எழுந்த நிலையில், தற்போது, நடிகர் ரஞ்சித் இப்படி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் பேசியதை பார்த்த பலரும் கொன்ற பிறகு என்ன அக்கறை? எனவும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.