இந்தி படம் தான் இந்திய சினிமாவா.? – சிரஞ்சீவி காட்டம்.!

Default Image

இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி,ராம்சரண், பூஜா ஹெக்டே ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஆச்சார்யா  படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.

அப்போது பேசிய சிரஞ்சீவி ” இந்திய சினிமா என்றாலே இந்தி சினிமா என்று எண்ணும் அளவிற்கு ஒருகாலத்தில் அந்த மொழி திரைப்படங்கள் விளம்பரம் செய்யப்பட்டன. பிராந்திய மொழி திரைப்படங்கள் எவ்வளவு நன்றாக எடுக்கப்பட்ட போதிலும், அது எப்போதும் தேசிய அளவில் பேசப்படாது.

கடந்த 1988-ம் ஆண்டு வெளியான  “ருத்ரவீணா” திரைப்படதிற்காக எனக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. நானும், படக்குழுவினரும் சேர்ந்து விருதை வாங்குவதற்காக  டெல்லிக்கு சென்றோம். விழாவுக்கு முன்பு நடந்த விருந்து நிகழ்ச்சியில், இந்தி சினிமா நட்சத்திரங்களின் போஸ்டர்கள்  வைத்து மட்டுமே அரங்கம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அதுமட்டுமில்லை, அந்த நிகழ்ச்சியில் இந்திய திரைப்படங்களுக்காக காண்பிக்கப்பட்ட பிரத்யேக காட்சியில் இந்தி திரைப்படங்களின் காட்சிகள் மட்டுமே காட்டப்பட்டது . தென்னிந்திய திரைப்படங்கள் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் , ஜெயலலிதாவின் புகைப்படங்கள் மட்டுமே காண்பிக்கப்பட்டன.

தென்னிந்தியாவில் என்.டி. ராமாராவ், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ராஜ்குமார், போன்ற ஏராளமான நடிப்பு சக்கரவர்த்திகள் இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் எங்களுக்கு கடவுள் போன்றவர்கள். அவர்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு இந்தி நடிகர்கள் மட்டுமே அந்நிகழ்ச்சியில் முன்னிலைப்படுத்தப்பட்டார்கள். உண்மையிலேயே அந்த நிகழ்ச்சியில் நான் அவமானப்பட்டேன்.

இப்போது அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற ‘பான் இந்தியா’ திரைப்படங்கள் தெலுங்கு சினிமாவை பெருமைக் கொள்ள செய்திருக்கின்றன. தெலுங்கு திரையுலகில் இருக்கிறேன் என இப்போது மார்தட்டி என்னால் சொல்ல முடியும். தெலுங்கு சினிமா இன்று இந்திய திரையுலகின் ஓர் அங்கமாக மாறிவிட்டது” என பேசியுள்ளார் .

இதற்கு முன்பு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கும் கன்னட நடிகர் சுதீப்க்கும் இடையே நடந்த இந்தி மொழி குறித்த சர்ச்சைக்கு பிறகு  சிரஞ்சீவியின் உணர்ச்சிகரமான பேச்சு தற்போது, பேசும் பொருளாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்