ஹேமா கமிட்டி தாக்கம்: தொழிற்சங்கம் அமைக்க உறுப்பினர்கள் கோரிக்கை.!
மலையாள நடிகர் சங்கத்தின் (அம்மா) 20 உறுப்பினர்கள் கேரள திரைப்பட ஊழியர் சம்மேளனத்தை (ஃபெஃப்கா) அணுகியுள்ளனர்.
கொச்சி: ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான எதிரொலியாக மலையாளத் திரையுலக நடிகர்கள் சங்கமான ‘அம்மா’ பிளவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
ஹேமா கமிட்டி அறிக்கை வெளியீட்டிற்குப் பிறகு, நடிகைகள் சிலர், முக்கிய நடிகர்கள் மீது, பாலியல் மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். பாலியல் குற்றச்சாட்டை அடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து, நடிகர் சித்திக் மற்றும் இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மற்றும் கேரள திரைப்பட அகாடமி தலைவர் பதவிகளை ராஜினாமா செய்தனர். அம்மா அமைப்பு மொத்தமாக கலைந்தது.
தற்பொழுது மலையாள திரைப்படத் துறையில் உள்ள நடிகர்களுக்கு தனித் தொழிற்சங்கம் அமைக்கக் கோரி, மலையாள நடிகர் சங்கத்தின் (அம்மா) 20 உறுப்பினர்கள் கேரள திரைப்பட ஊழியர் சம்மேளனத்தை (ஃபெஃப்கா) அணுகியுள்ளனர்.
மலையாளத் திரையுலகைச் சேர்ந்த 11 நடிகர்கள் மற்றும் 3 நடிகைகள் சேர்ந்து, ஃபெஃப்கா பொதுச் செயலாளர் பி உன்னிகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு அளித்தனர். தற்போது, 21 தொழிற்சங்கங்கள் ஃபெப்காவின் கீழ் செயல்படுகின்றன.
இது தொடர்பாக பேசிய ஃபெஃப்கா பொதுச் செயலாளர் உன்னிகிருஷ்ணன், ” முதலில் சங்கம் அமைக்கப்பட வேண்டும். ஃபெஃப்கா குழுவிற்கு அங்கீகாரத்தை அதன் அதிகாரப்பூர்வ அமைப்பு மற்றும் பிற விவரங்களை அணுகிய பின்னரே வழங்கும்.
இருப்பினும், நாங்கள் அம்மாவின் அடையாளத்தை பராமரிப்போம், அதன் உறுப்பினர் நடைமுறைகள் பாதிக்கப்படாமல் இருக்கும்” என்று கூறியுள்ளார்.