தமிழ் சினிமாவின் நடிப்பு அசுரன் தனுஷிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இவரெல்லாம் ஹீரோவா என கூறிய தமிழ் சினிமாவை இவர்தான் ஹீரோ என நினைக்க வைத்தவர் நடிகர் தனுஷ். ஹீரோவிற்கு உண்டான இலக்கணங்களை உடைத்து தனிக்கென தனி பாணியில் பயணித்து வெற்றியும் கண்டு வருகிறார் இவர்.
தனுஷிற்கு பெரிய ஹிட் படங்கள் என்பதை எளிதாக குறிப்பிட்டு விடலாம். ஆனால் அவரது ஒவ்வொரு படமும் தனுஷின் நடிப்புக்கான ஒவ்வொரு முயற்சி எனபதும், அதனை ஒவ்வொரு படத்திலும் மெருக்கேற்றிக்கொண்டே வருகிறார் என்பதும் உற்று நோக்கினால் மட்டுமே தெரியும்.
இவருக்கு தனக்குள்ளான நடிப்பை வெளிக்கொணர்ந்தது இவரது அண்ணனான செல்வராகவன் தான். செல்வராகவன் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன், புதுபேட்டை, மயக்கம் என்ன என இவர் எடுத்த படங்களில் தனுஷை தவிர வேறு யாரையும் நினைத்து கூட பார்க்க முடியாது என்ற அளவிற்கு நடிப்பின் புதிய பரிணாமத்தை தனுஷ் மூலம் காட்டியிருப்பார் இயக்குனர் செல்வராகவன்.
தனுஷின் நடிப்பை வேறு தளத்திற்கு கொண்டு சென்றதில் முக்கிய பங்கு வெற்றிமாறனுக்கு உண்டு. இவரது இயக்கத்தில் வெளியான பொல்லாதவன் (பிரபு ), ஆடுகளம் ( கருப்பு ), வடசென்னை (அன்பு ) என மூன்றிலும் அந்தந்த காப்பாத்திரமாகவே தனுஷ் வாழ்ந்திருப்பார். இவர்களின் அசாத்திய கூட்டணி பல விருதுகளை குவித்துள்ளது. அடுத்ததாக இவர்கள் கூட்டணியில் அசுரன் தயாராகி வருகிறது. நடிப்பு அசுரன் விரைவில் வெளியாக உள்ளான்.
தமிழ் சினிமாவின் நடிப்பு எனும் வட்டத்திற்குள் தனுஷ் அடங்கிவிடமாட்டார். அவரது வட்டம் சினிமா. அதில் பாடகர், பாடலாசிரியர், கதாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என அத்தனையும் கற்று தெரிந்த சகலகலா வல்லவன்தான் தனுஷ்.
நடிகர் தனுஷ் தனது நடிப்பால் தொட்ட உயரம் வேறெந்த இளம் நடிகரும் தொடாத உச்சம். தமிழ் மட்டுமல்லாது, பாலிவுட், ஹாலிவுட் என தனது நடிப்பு திறமையை அங்கும் நிருபித்து வெற்றி கொடி நாட்டி வருகிறார்!
தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நாயகன் தனுஷ் இன்று தனது 36 வது பிறந்தநாளை ரசிகர்களுடன் கோலாகலமாக கொண்டாடி வருகிறார். இவருக்கு நாமும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்.