கோட் ரிலீஸ் : ‘மக்களுக்கு இடையூறு இருக்க கூடாது’..கட்டளை விடுத்த விஜய்!
கோட் படத்தின் கொண்டாட்டத்தின் போது கட்சி கொடி, லோகோவை பேனர்களில் பயன்படுத்தக்கூடாது என விஜய் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை : கோட் படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக இருக்கும் சூழலில், நடிகர் விஜய் பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் படத்தைக் கொண்டாடவேண்டும் என்று ரசிகர்களுக்கு அறிவுரை செய்துள்ளார்.
ஏற்கனவே, கோட் படத்திற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தின் டிரைலர் வெளியீட்டின் போது சென்னை ரோஹிணி திரையரங்குகளிலிருந்த ரசிகர்கள் இருக்கைகளை உடைத்துக் கொண்டாடினார்கள். இது அந்த சமயம் சர்ச்சையாகவும் மாறியது. அதைப்போல, அதிகமான ரசிகர்கள் கூடியதன் காரணமாக, அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
எனவே, அந்த மாதிரி செயல்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காகத் தான், ‘கோட்’ படம் வெளியாவதற்கு முன்பே விஜய் இப்படியான ஒரு அறிவுரையை ரசிகர்களுக்கு வழங்கி இருக்கிறார். அத்தைபோல், விஜய் இப்போது நடிகராக மட்டுமில்லை ஒரு அரசியல் கட்சியின் தலைவராகவும் மாறியிருக்கிறார்.
எனவே, பொதுமக்களுக்குத் தொந்தரவு ஏற்படும் வகையில் எந்த செயலையும் செய்யக்கூடாது, அப்படிச் செய்தால் அது கட்சியின் பெயருக்கும் ஒரு எதிர்மறையான விமர்சனமாக அமைந்துவிடும் என்பதால் ரசிகர்களும், தொண்டர்களும் கூடுதல் பொறுப்புடன் இருக்க வேண்டும் எனவும் விஜய் அறிவுரை செய்துள்ளார்.
அதைப்போல, கோட் படத்தைக் கொண்டாடும்போது எந்த காரணத்துக்காகவும் கட்சி கொடியைப் பயன்படுத்தக்கூடாது எனவும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள கொடியினை மட்டும் பயன்படுத்திக்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனைப் பார்த்த சில ரசிகர்கள் கட்சிக்கொடி லோகோவை வைத்து பேனர் அடித்துக்கொண்டு விஜய் போட்ட உத்தரவால் என்ன செய்வதென்று, தெரியாமல் உள்ளனர். சினிமாவை, கொண்டாட வேண்டும் அதனை அரசியல் ஆக்கவேண்டாம் என்பதற்காகத் தான் விஜய் இந்த உத்தரவையும் போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.