GOAT வசூலை தொட முடியாத வேட்டையன்! 4 நாட்களில் எவ்வளவு தெரியுமா?
கோட் படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் 288 கோடி வசூல் செய்திருந்த நிலையில், அந்த சாதனையை ரஜினியின் வேட்டையன் படம் முறியடிக்க தவறியது.
சென்னை : இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி வசூல் ரீதியாக சக்கை போடு போட்ட திரைப்படம் விஜயின் “GOAT” படம் தான். இந்த படம் தான் இந்த ஆண்டு வெளியாகி அதிகம் வசூல் செய்த தமிழ்த் திரைப்படம் என்ற சாதனையை வைத்திருக்கிறது.
இந்த படத்தின் வசூல் சாதனையை ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான, வேட்டையன் படம் முறியடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், GOAT படத்தின் 4-நாள் வசூலை ஒப்பிட்டுப் பார்க்கையில் வேட்டையன் படம் குறைவாகத் தான் வசூல் செய்திருக்கிறது.
வழக்கமாகவே ரஜினி, விஜய் இருவருடைய படங்கள் வெளியானால் மாறி மாறி இருவருடைய படங்கள் வசூல் ரீதியாகப் போட்டியிட்டு வருகிறது. கடைசியாக விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த GOAT, லியோ ஆகிய படங்களுக்கு முன்பு வெளியான வாரிசு திரைப்படம் 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து ரஜினியின் அண்ணாத்த படத்தின் வசூல் சாதனையை முறியடித்திருந்தது.
அதற்கு அடுத்த படியாக, ரஜினியின் ஜெயிலர் படம் வாரிசு வசூல் சாதனையை முறியடித்தது. பின், லியோ படம் ஜெயிலர் வசூல் சாதனையை முறியடிக்கத் தவறியது. இந்த சூழலில், இவர்களுடைய சமீபத்திய திரைப்படங்களான வேட்டையன், GOAT இரண்டு படங்களில் எந்த படம் அதிகமாக வசூல் செய்யும் என்கிற எதிர்பார்ப்பு மிகவும் பெரிதாக இருந்தது.
GOAT படம் மொத்தமாக 460 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்த நிலையில், வேட்டையன் படம் இதுவரை வெளியான 5 நாட்களில் 300 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இரண்டு படங்களின் 4 நாள் வசூலை ஒப்பிட்டுப் பார்க்கையில் கோட் படம் தான் வெற்றிபெற்று இருக்கிறது. ஏனென்றால் கோட் படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் 288 கோடி வரை வசூல் செய்திருந்தது.
அதே சமயம், வேட்டையன் படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் 240 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. எனவே, 2024-ஆம் ஆண்டு வெளியாகி வார இறுதியில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையைக் கோட் படைத்துள்ளது. இன்னும் வேட்டையன் படம் அதிகமான திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருப்பதால் கோட் படத்தின் மொத்த வசூலை முறியடிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்…