தங்கலான் படத்தில் அதை பாக்க போறீங்க! எதிர்பார்ப்பை எகிற வைத்த விக்ரம்!

சென்னை : தங்கலான் படத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் காண்பிக்கப்படும் என நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் இன்று படத்திற்கான பிரஸ் மீட் நடந்தது. அதில், இயக்குனர் பா ரஞ்சித், மாளவிகா மோகனன், விக்ரம், ஜிவி பிரகாஷ், ஞானவேல் ராஜா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
அப்போது மேடையில் பேசிய விக்ரம் ” தங்கலான் படத்தில் 200 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் எல்லாம் காட்சி படுத்தப்பட்டுள்ளது. படத்தில் அதை எல்லாம் நீங்கள் பார்க்க போகிறீர்கள்” என கூறினார். ஏற்கனவே, தங்கலான் டிரைலரில் இடம்பெற்ற காட்சிகளும் விக்ரம் சொன்னது போல இருந்தது. எனவே, விக்ரமும் இப்படி பேசியுள்ளது படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.
மேலும், தொடர்ந்து பேசிய விக்ரம் படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் இசையை பற்றியும் பாராட்டி பேசினார். ” படத்தில் ஹீரோக்களில் ஒருவர் என்றால் ஜிவி பிரகாஷ் தான். அவருடைய பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. வரும் காலங்களில் ஜிவி அவருடைய மாமா ஏ.ஆர்.ரஹ்மான் போல ஆஸ்கர் விருது வாங்குவார்” எனவும் விக்ரம் பாராட்டி பேசினார்.
பின் இறுதியாக இவ்வளவு பெரிய படத்தினை நன்றாக மக்களுக்கு விளம்பரம் செய்துகொடுத்து படத்தின் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்தும் விக்ரம் பேசினார். இது குறித்தும் பேசிய அவர் ” இந்த மாதிரி ஒரு நல்ல திரைப்படத்தை அதிக அளவில் மக்களுக்கு தெரியப்படுத்த ப்ரோமோஷன் செய்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என விக்ரம் பேசி முடித்தார்.