‘தலைவர் 171’ கதை எனக்கு தெரியும்.! கெளதம் மேனன் ஓபன் டாக்.!
லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படத்தை இயக்கும் வேலைகளில் ஈடுபட உள்ளார். இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 171 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளார் அனிருத் இசையமைக்கிறார்.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட உள்ளது. இப்படத்திற்கான கதை எழுதும் பணிகளில், இயக்குனர் மற்றும் எழுத்தாளர் லோகேஷ் கனகராஜ் முற்றுமாக ஈடுபட்டு வருகிறார் இதற்கிடையில் இயக்குனர் கவுதம் வாசுதேவன் தனக்கு தலைவர் 171 படத்தின் கதை தெரியும் என்று கூறியிருக்கிறார்.
அவர் கூறியதாவது, “என்னிடம் இந்த கதையை கூறும் பொழுது அவர் ஏதோ ஒரு மனநிலையில் இருந்துள்ளார் என்று நினைக்கிறேன். லோகேஷ் இன்னும் நிறைய படங்களை உருவாக்குவார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சமீபத்தில் கொரோனா காலகட்டத்தில் 8 முதல் 10 இயக்குனர்கள் ஜூம் கால், வீடியோ கால் செய்து பேசினோம், ஒவ்வொரு வாரமும் நேரில் சென்று சந்திப்போம்.”
“சில மாதங்கள் சென்ற பிறகு கொரோனா முடிவடைந்தது. இதனை அடுத்து நாங்கள் ஒவ்வொருவரும் அவர்களது இல்லத்தில் அல்லது அலுவலகங்களில் சந்தித்து பேசுவோம். அந்த நேரத்தில் லோகேஷை நான் சந்தித்தேன். என் படங்களைப் பற்றியும் அவருடைய வேலையைப் பற்றியும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டு நிறைய நேரம் செலவழித்திருக்கிறோம்.”
“அவர் ரஜினியை வைத்து எடுக்கும் படத்தின் கதை எனக்கு தெரியும். எனக்கு மட்டும் அல்ல 8 முதல் 10 இயக்குனர்களுக்கு அந்த கதை தெரியும். அவர் அந்த கதையை எங்களிடம் கூறினார். அவர் பத்து படங்களோடு விடமாட்டார். 100 படங்களை தயாரிப்பார் என்று நான் நம்புகிறேன்.” எனக் கௌதம் மேனன் கூறினார். மேலும், கௌதம் மேனன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.