ஒற்றை ஆளாய் தோளில் சுமந்து ‘ஹிட்’ வரிசையில் சேர்த்த ரன்பீர் கபூர்.! Animal பார்க் ஆன் தி வே…
2018ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி இந்தியா முழுக்க சென்சேஷனல் ஹிட் அடித்த திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. அந்த படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் சந்தீப் ரெட்டி எழுத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் அனிமல் (ANIMAL). இதற்கிடையில் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை ஹிந்தியில் கபீர் சிங் எனும் பெயரில் ரீமேக் செய்து இருந்தார்.
ரன்பீர் சிங் கதாநாயகனாகவும், ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும், பாபி தியோல் வில்லனாகவும், அனில் கபூர் கதாநாயகனின் தந்தையாகவும் நடித்து உள்ளனர். படத்தை சந்தீப் ரெட்டி வங்கா எழுதி இயக்கியுள்ளார். ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் பின்னணி இசையை மேற்கொண்டு உள்ளார். அமித் ராய் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
சந்திப் ரெட்டி இயக்கும் படம் என்பதால் கண்டிப்பாக படம் வன்முறை காட்சிகள் அதிகமாகவும், ஆக்ரோஷமாகவும், படு ரொமான்ஸ் காட்சிகள் அதிகமாகவும் இருக்கும் என்று ரசிகர்கர்கள் எதிர்பார்த்தது போலவே அத்தனையும் கொட்டி தீர்த்துள்ளார் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா.
படத்தின் கதைக்களம் என்பது தந்தை பாசம் கிடைக்காமல் ஏங்கித் தவிக்கும் மகனுக்கும். அவன் பாசம் வைக்கும் தந்தைக்கும் இடையிலான கதை தான். தந்தை பாசம் கிடைக்காத மகன் தனது தந்தைக்காக மிருகமாக மாறும் கதைக்களம் தான் அனிமல். இடையில் வரும் காதல் காட்சிகள், பாபி தியோலின் வில்லன் கதாபாத்திரம், அனில் கபூரின் நடிப்பு என படத்தில் நடித்தவர்கள் அனைவரும் மிரட்டலாக நடித்துள்ளனர்.
படத்தின் முதல் பாதி மிகவும் விறுவிறுப்பாக, இப்படி ஒரு படத்தை பார்த்ததே இல்லை என ரசிகர்கள் மெய்சிலிர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது. குறிப்பாக படத்தின் இடைவேளை காட்சிகள் சில்லறையை சிதற விட்டு வைக்க விட்டுவிட்டது. ஆனால், இரண்டாம் பாதியில் ரசிகர்களை மிகவும் சோதனைக்கு உள்ளாக்கிவிட்டது. அதுவும் 3 மணி நேரம் 20 நிமிட படத்தின் நீளமானது ரசிகர்களை சில சமயம் திக்கு முக்காட வைத்துவிட்டது. இரண்டாம் பாதியில் தேவையற்ற காட்சிகள் அதிகம். கதை போகும் போக்கு எப்போது இந்த பட முடியும் என்கிற நிலையை எதிர்பார்க்க வைத்து விட்டது.
படத்தின் பிளஸ் என்று பார்த்தல், அதற்கு முதல் இடத்தில் வந்து நிற்பவர் நடிகர் ரன்பீர் கபூர். தனது அனுபவமான நடிப்பை மிகவும் அசால்டாக ஆக்ரோஷமாக வெளிப்படுத்தி உள்ளார். உண்மையில் ரன்பீர் கபூர் தான் படத்தை பிளாப் லிஸ்டில் இருந்து தூக்கி ஹிட் லிஸ்டுக்கு கொண்டு சென்றுள்ளார். அதற்கு அடுத்ததாக பின்னணி இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் மற்றும் பாடல்கள் இசையமைத்த மற்ற இசையமைப்பாளர்கள். அனைத்து பாடல்களும் ரசிகர்கள் ரசிக்கும் படியாக உள்ளன. அதற்கேற்ப காட்சி அமைக்கப்பட்டுள்ளன.
ஹீரோ கதாபாத்திரத்திற்கு மெனக்கெட்டு இருந்த இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா, வில்லன் கதாபாத்திரத்திற்கும் அதேபோல் மெனக்கெட்டு இருந்தால் படம் இன்னும் பேசப்பட்டு இருந்திருக்கும். ஆனால் வில்லன் கதாபாத்திரம் பெரிய அளவில் எழுதப்படாமல் வில்லனுக்கு என இந்திய சினிமாவில் எழுதப்பட்ட விதியின் கீழே அமைந்துள்ளது. இது ரசிகர்கள் என்ன எதிர்பார்த்தார்களோ அதையே கொடுக்கும் விதமாக எந்தவித சஸ்பென்சும் இல்லாமல் சுவாரசியமும் இல்லாமல் படம் அமைய வழிவகுத்துவிட்டது.
மற்றபடி படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் உள்ளிட்டோரியின் நடிப்பு ரசிக்க வைத்தன. சண்டை காட்சிகள் மிரள வைத்து விட்டது. படத்தைக் காப்பாற்றியது ரன்பீர் கபூர், பின்னணி இசை, ஆக்ரோஷமான சண்டை காட்சிகள் என்று தான் கூற வேண்டும். மற்றபடி இடைவேளைக்கு பின்னர் நாம் படம் பார்க்கையில் இதற்கடுத்த இதுதான் என்கிற நிலைமை தான் படம் முழுக்க இருந்தது. படத்தின் நீளத்தை வெட்டி எறிந்து இருந்தால் நிச்சயம் இந்த படம் தவிர்க்க முடியாத பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்து இருக்கும் என்பது உண்மை.
மொத்தத்தில் தோல்வியின் விளிம்பில் இருந்த அனிமல் (ANIMAL) திரைப்படத்தை வெற்றிக்கு அருகில் கொண்டு சேர்ப்பது ரன்பீர் கபூர் இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் மற்றும் ஆக்சன் காட்சிகள் மட்டுமே.