சிம்பு முதல் சிவகார்த்திகேயன் வரை…வாழை படத்துக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்!
சென்னை : வாழை திரைப்படத்தின் பார்த்து வியந்த சிம்பு, சிவகார்த்திகேயன் என பல பிரபலங்கள் படத்திற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னுடைய சிறிய வயதில் தன்னுடைய சொந்த ஊரான நெல்லை பகுதியில் வாழைத்தார் ஏற்றி போகும் லாரி ஒன்றில் பயணித்தபோது அந்த லாரி விபத்தில் சிக்கிய உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து தான் இந்த ‘வாழை’ படத்தினை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது.
இந்நிலையில், படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு பல பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் “வாழை படத்தின் டிரைலர் என்னை மயக்க வைத்தது. நடிகர்கள் மற்றும் குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த மற்றும் அன்பான வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.
அவரை போல நடிகர் சிவகார்த்திகேயன் வாழை படத்தை பார்த்துவிட்டு காணொளி மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தார். படம் குறித்து அவர் பேசியதாவது ” வாழை படத்தில் மாரி செல்வராஜ் அவருடைய வாழ்க்கையில் நடந்த பெரிய சம்பவத்தை வைத்து படத்தை எடுத்து இருக்கிறார். எளிய மக்களின் வாழ்க்கையை வாழை படத்தில் அருமையாக காட்டி இருக்கிறார்” என பேசினார்.
மேலும், தொடர்ந்து பேசிய சிவகார்த்திகேயன் ” பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு எனக்கு ரொம்பவே பிடித்த படம் என்றால் வாழை படம் தான். படம் பாருங்கள் மாரிசெல்வராஜ் என்றால் யார் அவர் வாழ்வில் என்னென்ன சம்பவங்கள் நடந்தது என்பது தெரியும்” எனவும் சிவகார்த்திகேயன் பேசினார். அவர் பேசிய அந்த வீடியோ காட்சி படத்தின் இசை, டிரைலர் வெளியீட்டு விழாவிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
சிவகார்த்திகேயனை போலவே நடிகர் சிம்புவும் வாழை படம் பற்றி பாராட்டி பேசினார் . வாழை படத்தை பார்த்துவிட்டு மாரி செல்வராஜை நேரில் அழைத்த சிம்பு அவருடன் படம் பற்றி பேசியுள்ளார். பேசி முடித்த பிறகு தன்னுடைய விமர்சனத்தை வீடியோ காட்சியாகவும் பதிவு செய்தார் படம் பற்றி சிம்பு பேசியதாவது “வாழை படம் கண்டிப்பாக மக்களுக்கு பிடிக்கும். படம் சிம்பிளான ஒரு படம் தான் ஆனால் படத்திற்குள் அவ்வளவு வலி இருக்கிறது” என சிம்பு கூறினார். பிரபலங்கள் பலரும் வாழை படத்தினை பாராட்டி உள்ள காரணத்தால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.