Mark Antony: மார்க் ஆண்டனி படத்துக்கான தடை நீக்கம் – பெருமூச்சு விட்ட படக்குழு!
நடிகர் விஷால் நடிப்பில் செப்டம்பர் 15 வெளியாகவிருக்கும் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், படக்குழு நிம்மதி அடைந்துள்ளது.
நடிகர் விஷால் தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் “மார்க் ஆண்டனி” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அவருடன் எஸ்.ஜே.சூர்யாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கான ட்ரைலர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
இந்த நிலையில், இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருந்த நிலையில், தற்போது லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் படத்தை வெளியீட சென்னை உயர்நீதிமன்றம் தடை செய்து உத்தரவிட்டுள்ளது. நிலுவைத் தொகையை செலுத்தவில்லை என லைகா தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிறந்துள்ளது.
ஏற்கனவே, லைக்கா நிறுவனத்திற்கு நடிகர் விஷால் ரூ.21.29 கோடி கொடுக்கப்படவேண்டி இருந்த நிலையில், அதில் ரூ.15 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த தனி நீதிபதி முன்னதாக உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, இன்னும் அந்த தொகையை விஷால் செலுத்தாத காரணத்தால் உயர்நீதிமன்றத்தில் லைக்கா முறையீட்டுள்ளது.
இதன் அடிப்படையில், லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை வித்திருந்தது. இதனால், படக்குழு மிகவும் பதட்டத்தில் இருந்து வந்தது. அது மட்டுமின்றி, உயர்நீதிமன்ற உத்தரவுகளை இன்னும் விஷால் அமல்படுத்தவில்லை என்ற காரணத்தால், இன்று நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நடிகர் விஷால் விளக்கமளித்த நிலையில், மார்க் ஆண்டனி படத்துக்கான தடை நீக்கப்பட்டுள்ளது. அதாவது, 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் இந்தாண்டு செப்டம்பர் வரையிலான நடிகர் விஷாலின் 4 வங்கி கணக்கு விவரங்களை தாக்கல் செய்யவும் நடிகர் விஷால் மற்றும் அவரது குடும்பத்தினரின் அசையும், அசையா சொத்து விவரங்களையும் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, நடிகர் விஷால் நேரில் ஆஜராகவும், விசாரணை செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.