பாலியல் புகார்: நடிகரும், எம்எல்ஏவுமான முகேஷ் கைதாகி ஜாமீனில் விடுதலை!
சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி, முகேஷ் தன்னை பலாத்காரம் செய்ததாக நடிகை ஒருவர் போலீசில் புகார் கூறியிருந்தார்.
திருவனந்தபுரம் : மலையாள நடிகைகள் உள்பட பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் குறித்து விச ரணை நடத்திய ஹேமா கமிட்டி அறிக்கை வெளிவந்த பின்னர் மலையாளஇயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்பட சினிமா கலைஞர்கள் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் குவிந்தது.
இது தொடர்பாக, பிரபல மலையாள முன்னணி நடிகர்களான சித்திக், ஜெயசூர்யா, நிவின் பாலி, மணியன் பிள்ளை ராஜு, முகேஷ், பாபுராஜ், இயக்குநர் ரஞ்சித் என பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வரிசையில், சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி பிரபல நடிகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ வுமான முகேஷ் தன்னை பலாத்காரம் செய்ததாக நடிகை ஒருவர் போலீசில் புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக கொச்சி மரடு போலீசார் நடிகர் முகேஷ் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இவருக்கு எர்ணாகுளம் செஷன்ஸ் நீதிமன்றம் ஏற்கனவே முன்ஜாமீன் வழங்கி இருந்தது. இந்நிலையில், நடிகர் முகேஷிடம் சிறப்புப் பிரிவு போலீசார் நேற்று திடீரென விசாரணை நடத்தினர். கொச்சியில் வைத்து எஸ்பி பூங்குழலி தலைமையில், சுமார் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். இதன் பிறகு அவருக்கு ஆண்மை பரிசோதனை உள்பட மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஏற்கனவே, முகேஷ் எம்எல்ஏ-வுக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் முன்ஜாமீன் அளித்திருந்ததால் விசாரணைக்குப் பின்னர் உடனடியாக அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.