பண மோசடி வழக்கு: நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்.!
பணமோசடி விசாரணையில் ஏப்ரல் 27 ஆம் தேதி விசாரணைக்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

செகந்திராபாத் : ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களான சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட பணமோசடி வழக்கு தொடர்பாக, நடிகர் மகேஷ் பாபுவை ஏப்ரல் 27 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகஅமலாக்க இயக்குநரகம் (ED) சம்மன் அனுப்பியுள்ளது.
ஒரே நிலத்தை வெவ்வேறு நபர்களுக்கு விற்று ஏமாற்றியதாக, சூரானா குழுமம், சாய் சூர்யா டெவலப்பர்கள் மீது புகார்கள் உள்ளன. இந்த நிறுவனங்களின் விளம்பரத்தில் நடிக்க மகேஷ் பாபு பெற்ற ரூ.2.5 கோடி, மோசடி பணத்தில் இருந்து வழங்கப்பட்டதாக அமலாக்கத்துறை சந்தேகித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த வாரம் 16ஆம் தேதி சோதனை நடந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல்எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் மகேஷ் பாபு நடித்துள்ளார். இந்த நிறுவனங்கள் நடத்தும் சர்ச்சைக்குரிய ரியல் எஸ்டேட் திட்டங்களை விளம்பரப்படுத்தியதற்காக நடிகர் மகேஷ் பாபு விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்.
ரியல் எஸ்டேட் மோசடியுடன் தொடர்புடைய குற்றத்தின் வருமானத்தின் ஒரு பகுதியாக இந்தப் பணம் இருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். இதன் அடிப்படையில், ஏப்ரல் 16 அன்று, பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA), 2002 இன் கீழ், ED இன் ஹைதராபாத் மண்டல அலுவலகம், ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத்தில் உள்ள நான்கு இடங்களில் சோதனை நடத்தியது.
இந்த சோதனைகளில் சுரானா குழுமத்தின் வளாகத்தில் இருந்து ரூ.74.5 லட்சம் ரொக்கம் உட்பட சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள குற்றஞ்சாட்டத்தக்க ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத ரொக்க பரிவர்த்தனைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பாக்யநகர் பிராபர்டீஸ் லிமிடெட் இயக்குனர் நரேந்திர சுரானா, சாய் சூர்யா டெவலப்பர்ஸ் உரிமையாளர் கே சதீஷ் சந்திரா மற்றும் பலர் மீது தெலுங்கானா காவல்துறை பதிவு செய்த பல வழக்குகளின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.