அனுமதியின்றி லியோ பட பேனர் வைக்கக்கூடாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் நாளை மறு நாள் வெளியாகவுள்ள நிலையில், அனுமதியின்றி லியோ திரைப்படத்தின் பேனர் வைக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர், திண்டுக்கலில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களுக்கு தடை விதிக்கக்கோரி மனுதாக்கல் செய்தார்.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணையில், லியோ திரைப்பட பேனர்களை அனுமதியின்றி எந்த இடத்திலும் வைக்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து, மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில்அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டுவிட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, லியோ படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, அக்டோபர் 19-ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கு காட்சிகளை தொடங்க அனுமதி அளிப்பது தொடர்பாக தமிழக அரசு பரிசீலிக்கட்டும்.
இது தொடர்பாக, படத்தின் தயாரிப்பு நிறுவனம் அரசிடம் மனு அளிக்கலாம். அந்த மனுவை நாளை மதியத்துக்குள் அரசு பதில் தெரிவிக்க வேண்டும் என தெரிவிப்பட்டிருந்தது. இந்நிலையில், லியோ படத்திற்கு காலை 7 மணி காட்சிக்கு அனுமதி அளிக்கக் கோரி தமிழக அரசிடம் மனு அளிப்பதற்காக, லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவன தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் படக்குழு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலாளரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.