ஆஸ்கர் கமிட்டியில் இடம்பெற்ற இயக்குனர் மணிரத்னம்!

Mani Ratnam

2023-ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான பட்டியலை  வெளியிட்டுள்ளது ஆஸ்கர்.

சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. உலக நாடுகளில் இருக்கும் ஒவ்வொரு திரைக் கலைஞர்களும் சென்றடைய விரும்பும் மேடையாக இருந்து வருகிறது. இதில், சமீப காலமாகத்தான் இந்திய கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருது கிடைத்து வருகிறது. கடந்தாண்டு முன்பு வரை சத்யஜித் ரே, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட சிலர் இந்திய சார்பில் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்கர் விருது விழாவில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்காக இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கர் விருதினை வென்றனர். இதனை இந்திய ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். விருது ஒருபக்கம் இருந்தாலும், இதனை தேர்வு செய்வதற்கு ஆண்டுதோறும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் அழைக்கப்படுவார்கள்.

அந்தவகையில், 2023ம் ஆண்டு ‘ஆஸ்கர் விருதுகள்’ தேர்வுக் குழுவுக்கு இந்தியர்கள் உட்பட 398 பேர் உறுப்பினராக தேர்வு செய்யயப்பட்டுள்ளனர். புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான பட்டியலை ஆஸ்கர் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆஸ்கர் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இயக்குநர் மணிரத்னத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்தும் கூறியுள்ளார். மேலும், ஆஸ்கர் குழுவின் புதிய உறுப்பினர்கள் பட்டியலில் ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார், தயாரிப்பாளர் கரண் ஜோகர் ஆகியோரும் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் சூர்யா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்