ஹேமா கமிட்டி அறிக்கை: இயக்குனர் ஆஷிக் அபு… முக்கிய பொறுப்பில் இருந்து விலகல்.!
கொச்சி : ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக இயக்குனர் ஆஷிக் அபு ஃபெப்காவில் இருந்து விலகினார்.
மலையாளத் திரையுலகில் பாலியல் சுரண்டல் தொடர்பான ஹேமா கமிட்டி அறிக்கை மீதான தலைமையின் நிலைப்பாட்டை விமர்சித்த சில நாட்களில், இயக்குனர் ஆஷிக் அபு, கேரள திரைப்பட ஊழியர் சம்மேளனம் (ஃபெஃப்கா) இயக்குனர்கள் சங்கத்தில் இருந்து இன்று ராஜினாமா செய்தார்.
மலையாள திரையுலகில், பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி அளித்த அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. திரைப்பட வாய்ப்புகளுக்காக, பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதாகவும், பிரபல நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் அதில் தொடர்பு இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து, பல ஆண்டுகளுக்கு முன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நடிகைகள், தாங்கள் அனுபவித்த கொடுமைகளை பொது வெளியில் வெளிப்படையாக பேச துவங்கினர். இது, கேரள சினிமாத் துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க, ஏழு பேர் அடங்கிய சிறப்பு விசாரணை குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது.
இதனால், மாநில அரசு நடத்தும் கேரள சலசித்ர அகாடமியின் தலைவர் பொறுப்பில் இருந்து இயக்குனர் ரஞ்சித்தும், ‘அம்மா’ என்றழைக்கப்படும், மலையாள திரைக்க லைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலர் பதவியில் இருந்து சித்திக்கும் ராஜினாமா செய்தனர். இதனையடுத்து, நடிகர் மோகன்லால் தலைமையிலான கேரள சினிமா நடிகர் சங்க செயற்குழுவே கலைக்கப்பட்டு விட்டது.
இந்த சூழலில், ‘FEFCA’-இன் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து இயக்குனர் ஆஷிக் அபு ராஜினாமா செய்துள்ளார். ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு, ஹேமா கமிட்டி ஆதரவு தெரிவத்தும், FEFCA தலைமைக்கு எதிராக ஆஷிக் அபு கருத்து தெரிவித்து வருகிறார்.
பதவி விலகல் குறித்து ஆஷிக் அபு தனது கடிதத்தில் ” ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதும் FEFCA பொதுச்செயலாளர் பி. உன்னிகிருஷ்ணன் இதுவரை ஊடகங்களை சந்திக்கவில்லை. இதற்கு அமைப்புக்குள் கடும் அதிருப்தி நிலவுகிறது.
ஒரு உறுப்பினராக எனக்கு ஏமாற்றம். இந்த அமைப்பும் தலைமையும் தங்களின் சமூகப் பொறுப்பை நிறைவேற்றத் தவறிவிட்டன. ஃபெஃப்காவுடன் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனால் பி.உன்னிகிருஷ்ணனின் தலைமையின் கீழ் சங்கம் எவ்வாறு இயங்குகிறது என்பதில் எனக்கு உடன்பாடில்லை.
அவரது பாசாங்குத்தனமான நிலைப்பாட்டை அரசாங்கம் உணர்ந்து அவரை திரைப்படக் கொள்கைக் குழுவிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியறுத்தியுள்ளார். பாசாங்குத்தனமான தலைமைக்கு எதிராக கடுமையான கருத்து வேறுபாடு மற்றும் எதிர்ப்பு தெரிவித்து, ஃபெஃப்கா முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன் ” என்று ஆஷிக் அபு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.