“சேர்ந்து வாழ விருப்பமில்லை”.. 27ஆம் தேதியோடு முடிவுக்கு வரும் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து!
விவாகரத்து கோரிய வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விசாரணைக்கு ஆஜராகினர்.
சென்னை : நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் ஒருவரையொருவர் பிரிவதாக 2022 இல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்த ஜோடி அவர்களின் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டதாக அறிவித்த நிலையில், சட்டப்பூர்வமாக பிரிந்து செல்ல குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர்.
அவர்களது மனு ஏற்கப்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இருந்தாலும், இந்த வழக்கில் இருவரும் கடந்த மூன்று முறை விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால், இருவரும் மீண்டும் சந்திப்பார்கள் என்று அனைவரும் நினைத்தனர். மேலும், அவர்களுக்குள் சமாதானம் ஏற்பட்டதாக நம்பப்பட்டது.
அது மட்டும் இல்லாமல், பலமுறை தனுஷ் – ஐஸ்வர்யா ஆகிய இரு வீட்டாரின் குடும்பத்தினரும் சேர்த்து வைக்க முயன்ற அணைத்து முயற்ச்சிகளும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், சென்னை குடும்ப நல கோர்ட்டில் இன்று நடைபெற்ற விவாகரத்து வழக்கு விசாரணைக்கு, தனுஷ்- ஐஸ்வர்யா ஆகிய இருவருமே ஆஜராகினர்.
விசாரணயில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில், விவாகரத்து மனு மீதான இறுதி தீர்ப்பு நவம்பர் 27ம் தேதி வழங்கப்படும் என தெரிவித்து விசாரணையை 27ம் தேதிக்கு ஒத்தி வைத்தது சென்னை குடும்ப நலநீதிமன்றம்.
தற்பொழுது, அவர்களது 18 வருட திருமணத்தின் இறுதித் தீர்ப்பு நவம்பர் 27 அன்று எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷும் ஐஸ்வர்யாவும் 2004ல் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும், யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உள்ளனர், இருவரும் பிரிவதாக அறிவித்தாலும் பல விழாக்களில் தனித்தனியே தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுடன் யாத்ரா மற்றும் லிங்கா பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.