நடிகை ரேவதி அளித்த புகார்: நடிகர் சித்திக் மீது பாய்ந்தது பாலியல் வழக்கு.!
திருவனந்தபுரம் : நடிகை ரேவதி அளித்த புகாரில் நடிகர் சித்திக் மீது, பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மலையாள திரையுலகில் பாலியல் புகார்கள் வேகமெடுத்துள்ள நிலையில், மலையாள திரைப்பட நடிகர் சங்கம் நேற்று முழுவதுமாக கலைக்கப்பட்டது. கடந்த வாரம் அங்கு பெண் நடிகைகளுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை அளித்தது.
ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து நடிகைகள் பலர், தங்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியாக ஏற்பட்ட துன்புறுத்தல்கள் குறித்து தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தற்போது பெரிய அளவில் பேசும்படி சென்றுகொண்டிருக்கிறது. இதன் முதற்படியாக இளம் நடிகை அளித்த பாலியல் புகாரின் பேரில், மலையாள நடிகரும், நடிகர் சங்க முன்னாள் பொதுச் செயலாளரருமான சித்திக் மீது, பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மலையாளத் திரையுலகில் எழுந்துள்ள பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் நடிகை ரேவதி சம்பத் அளித்த புகாரில், பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் விடுத்த பிரிவில் திருவனந்தபுரம் அருங்காட்சியகம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மஸ்கட் ஹோட்டலில் 2016-ல் நடந்த வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, ரேவதி சம்பத் அளித்த புகாரில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.