சினிமா சான்ஸ்… எங்கள் பெயரை சொல்லி மோசடி.! கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.!
மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் கமலின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு, அவர்களது நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி மோசடி செய்ய முயல்பவர்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படம் ரிலீசானது. இப்பொது, கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கி வரும் தக்லைப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதை தவிர, கமலின் அடுத்த படமான ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தையும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இந்த நிலையில், மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் கமலின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை.
நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்ப வேண்டாம். எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளது.
— Raaj Kamal Films International (@RKFI) March 29, 2025