யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? சும்மா வதந்தி பரப்பாதீங்க..விளக்கம் கொடுத்த மகன்!
கே.ஜே. யேசுதாஸ் நலமாக இருப்பதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் பொய்யான தகவல் எனவும் மகன் விஜய் யேசுதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை : பிரபல பின்னணி பாடகரான கே.ஜே.யேசுதாஸ் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற செய்தி தான் இன்று காலையில் இருந்து தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது. த்த அணுக்கள் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டதால் அவருக்கு உரிய சிகிச்சை அளித்து வருவதாக தனியார் மருத்துவமனை தரப்பு செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
தற்போது, யேசுதாஸ் நலமுடன் இருப்பதாகவும், மருத்துவ பரிசோதனைகள் முடிந்த பிறகு நலமுடன் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டு இருந்ததாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது.
இந்த தகவல் ரசிகர்களுக்கு மத்தியில் அவருக்கு என்னாச்சு என கேள்விகளை எழுப்ப காரணமாகவும் அமைந்தது. இந்த தகவல் உண்மையா இல்லையா என தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில், இதற்கு தெளிவான விளக்கத்தை பாடகரும் கே.ஜே.யேசுதாஸ் மகனுமான விஜய் யேசுதாஸ் விளக்கம் அளித்துள்ளார். தனது தந்தை நலமாக இருப்பதாகவும் இப்போது அவர் அமெரிக்காவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதைப்போல, டிடி நெக்ஸ்ட் ஊடகம் கே.ஜே. யேசுதாஸின் மேலாளர் சேது ஐயலுக்கு தொடர்பு கொண்டு இந்த விஷயம் குறித்து கேட்டபோது அவரும் மறுப்பு தெரிவித்து கே.ஜே.யேசுதாஸ் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஊடகத்திற்கு கொடுத்த தகவலின் படி “யேசுதாஸ் இப்போது உடல் நலத்துடன் இருக்கிறார். அவருடைய உடல் நலம் குறித்து பரவி வரும் தகவல் முற்றிலும் வதந்தி தகவல். எனவே, இதுபோன்ற வதந்தியான தகவலை பரப்பவேண்டும் என ஊடகங்கள் வாயிலாக நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” எனவும் தெரிவித்துள்ளார்.