“அந்த மனசு தான் சார் கடவுள்”..மணிகண்டன் குடும்பத்திற்கு பெரிய உதவி செய்த விஜய் சேதுபதி!
என்னுடைய தங்கையோட கல்யாணத்துக்கு ரூ.3 லட்சமும் கொடுத்து விஜய் சேதுபதி பெரிய உதவி செய்தார் என மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
சென்னை : மல்டி டேலண்ட் என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர் என்று சொன்னால் மணிகண்டன் என்று சொன்னால் கூட அதில் மாற்றுகருத்து இருக்காது. ஏனென்றால், நடிப்பதை தவிர்த்து படங்களுக்கு வசனம் எழுதுவது, மற்ற நடிகர்கள் போல மேமிக்கிரி செய்வது என அசத்தி வருகிறார். இப்போது மணிகண்டன் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடித்தாலும் ஆரம்ப காலத்தில் பல கஷ்டங்களை சந்தித்து இருக்கிறார்.
அந்த மாதிரி ஆரம்ப காலத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தபோது அவருடைய குடும்பத்திற்கு விஜய் சேதுபதியும் பல உதவிகளை செய்திருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது மணிகண்டன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய மணிகண்டன் ” காதலும் கடந்து போகும் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தபோது விஜய் சேதுபதியிடம் பேசுவதற்கு முதலில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதன்பிறகு ஒரு முறை மழை அதிகமாக பெய்து கொண்டிருந்த சமயத்தில் நானும் விஜய் சேதுபதியும் ஒரு இடத்தில் நின்று கொண்டு இருந்தேன். அப்போது தான் அவரிடம் எனக்கு பேசவே வாய்ப்பு கிடைத்தது. என்னை பற்றி விசாரித்தார் நான் வேலை செய்த இடங்களை பற்றி சொன்னேன். மழை நின்றபிறகு அவர் போகவில்லை என்னை அழைத்து என்னிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார்.
அதன்பிறகு என்னுடைய நம்பரை அவர் கேட்டார் நான் நம்பரை கொடுத்தேன். அவரிடம் பேசி 3 நாட்களுக்கு பிறகு என்னுடைய தங்கைக்கு மூக்கில் சிகிச்சை செய்யவேண்டிய சூழல் ஒன்று ஏற்பட்டது. எனவே, எனக்கு பணம் வேண்டும் என்பதால் என்னுடைய சம்பள தொகையை சீக்கிரம் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டேன். இந்த விஷயம் விஜய் சேதுபதிக்கு தெரிந்துவிட்டது. பின் நான் மருத்துவமனையில் இருந்தபோது எனக்கு கால் செய்து நான் மருத்துவமனைக்கு தான் வந்துகொண்டு இருக்கிறேன் என சொன்னார்.
வந்து சில உதவிகளை செய்துகொடுத்தார். அதன்பிறகு 3 மாதங்கள் கழித்து என்னுடைய தங்கைக்கு திருமணம் வைத்திருந்தேன். விஜய் சேதுபதிக்கு அழைப்பிதழ் கொடுத்திருந்தேன். பிறகு திருமணம் முடியும் போது வேகமாக வந்துவிட்டார். வந்துவிட்டு உங்களுடைய வீட்டு விழாவிற்கு நான் வராமல் இருந்தால் அது சரியாக இருக்காது என கூறினார்.
அதன்பின் திருமணத்திற்கு வந்து வீட்டிற்கு செல்லும்போது இந்த தருணம் பணம் அதிகமாக செலவு ஆகும் இந்த இதில் பணம் இருக்கிறது என கூறி 3 லட்சம் கொடுத்து உதவி செய்தார்” எனவும் மணிகண்டன் நெகிழ்ச்சியுடன் இந்த விஷயத்தை தெரிவித்திருக்கிறார். அந்த 3 லட்சம் இருந்த காரணத்தால் தான் மண்டபம் வாடகை என அனைத்தும் முடிந்து கையில் மீதம் 700 ரூபாய் இருந்தது எனவும் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.