சொந்த வீடு கட்டியபோது இருந்ததைவிட இது மகிழ்ச்சியாக இருக்கு – சூர்யா நெகிழ்ச்சி பேச்சு!
நீங்க எனக்குக் கொடுத்த வருமானத்தின் மூலமாக அகரம் பவுண்டேஷன் அலுவலகம் கட்டப்பட்டுள்ளதாக சூர்யா தெரிவித்துள்ளார்.

சென்னை : நடிகர் சூர்யா நடிப்பதை தாண்டி அகரம் பவுண்டேஷன் என்ற ஒரு அறக்கட்டளையை தொடங்கி அதன்முலம் பல குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். கடந்த 2006-ஆம் ஆண்டிலிருந்து அறக்கட்டளை மூலம் பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். குறிப்பாக, தமிழ்நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு கல்விக்கு நிதியுதவியையும் செய்து வருகிறது.
இதனையடுத்து, அகரம் அறக்கட்டளை வளர்ந்துள்ள நிலையில், புதிதாக சென்னையில் அலுவலகம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகரில் பெரிதாக கட்டப்பட்டுள்ள அறக்கட்டளையை இன்று சூர்யா திறந்து வைக்க வருகிறாய் தந்தார். விழாவில் நடிகர் சூர்யா மற்றும் அவருடைய மனைவி ஜோதிகா, நடிகர் கார்த்தி, நடிகர் சிவகுமார் என அவருடைய குடும்பமே கலந்து கொண்டது.
விழாவிற்கு வந்த சூர்யாவுக்கு மாணவர்களும் அமோக வரவேற்பை கொடுத்தனர். “கல்வியே எங்கள் ஆயுதம்.. கல்வியே எங்கள் கேடயம்” என கோஷமிட்டு வரவேற்பு அளித்தனர். அது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது. இதனையடுத்து, நிகழ்ச்சியில் சூர்யா நெகிழ்ச்சியுடன் பேசிய விஷயங்களும் வைரலாகி கொண்டு இருக்கிறது. விழாவில் பேசிய சூர்யா “2006-ல் கஜினி படத்திற்குப் பிறகு, கல்விக்காக சமூகத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலிருந்தே அகரம் அறக்கட்டளை உருவானது. 2010-ல் “விதை” திட்டம் தொடங்கப்பட்டு, இதுவரை 5000-க்கும் மேல் மாணவர்கள் அதன் மூலம் கல்வி பெற்றுள்ளனர்.
அகரம் அறக்கட்டளை 20 ஆண்டுகளாக செயல்படுவதற்கான முக்கிய காரணம் தன்னார்வலர்கள். ஆண்டுதோறும் 10,000 மாணவர்கள் விண்ணப்பிப்பதில், 700 பேருக்கு உதவ முடிகிறது. குறிப்பாக, ஜவ்வாது மலைப்பகுதியிலிருந்து ஒரு மாணவர் விண்ணப்பிக்க, 10 தன்னார்வலர்கள் முயன்ற பின்னர், இறுதியாக ஒருவரால் விண்ணப்பம் பெறப்பட்டது. இன்று அந்த மாணவர் மருத்துவராக உயர்ந்துள்ளார்.
சூர்யா, “அகரம் அலுவலகம் என்பது ஒரு கனவின் வெளிப்பாடு. இது மக்கள் சமூகத்திற்கு திருப்பி கொடுக்கும் இடம். உலகம் எங்களை எப்படிப் பார்க்கிறது என்பதற்கான விழிப்புணர்வையும் மாணவர்கள் இங்கு பெறுவார்கள்” எனவும் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.