“விடாமுயற்சி கதை என்னுடையது இல்லை”…உண்மையை போட்டுடைத்த மகிழ் திருமேனி!
நம்மோட comfort zone-ல இருந்து வெளியே வரக்கூடிய ஒரு வாய்ப்பாக இந்தப் படத்தைப் பயன்படுத்திக்கலாம் என அஜித் கூறியதாக இயக்குநர் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார்.
சென்னை : அஜித் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தற்போது இயக்குநர் மகிழ் திருமேனி தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் படம் குறித்து சில விஷயங்களை பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” விடாமுயற்சி படத்தின் கதை என்னுடையது அல்ல. இந்த மாதிரி ஒரு கதையில் படம் எடுக்கவேண்டும் என்று என்னிடம் அஜித் சார் கூறினார். ‘விடாமுயற்சி’ கதைக்கு என்னை ஏன் அஜித் சார் தேர்ந்தெடுத்தார் என்ற கேள்வி எனக்குள் எழுந்து கொண்டே இருந்தது.
எனவே, ஒரு முறை அவரிடம் நேரடியாகவே நான் இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு முன்னராகவே, ‘மகிழ், நம்மோட comfort zone-ல இருந்து வெளியே வரக்கூடிய ஒரு வாய்ப்பாக இந்தப் படத்தைப் பயன்படுத்திக்கலாம்’னு அவர் சொன்னார்.உண்மையில் எங்களுடைய கம்போ என்பது யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்று தான் நினைக்கிறன்.
நீங்கள் சொன்னது மாதிரி அஜித், அர்ஜுன், த்ரிஷா என முதல் கட்டமே பரபரப்பு தந்தாலும் ஒரு சின்ன டென்ஷன் மனதிற்குள்ளாக இருப்பது உண்மை தான். அஜித் சார் எதிர்பார்க்கிறது மாதிரியும், நான் விரும்புவது மாதிரியும், அதையே மக்கள் விரும்புவது மாதிரியும் படம் செய்யணும்னு ஆசை இருந்தது. எனவே, அந்த மாதிரி ஒரு அஜித் சாரை படத்தில் கொண்டு வந்து இருக்கிறேன். கண்டிப்பாக நீங்கள் ஆச்சரியமாக பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.
அஜித் சாரைப் பொறுத்தவரை, நம்மளுடைய சமூகத்தின் போக்குகளை நுட்பமாகக் கவனிக்க கூடிய ஒரு நபர். ஆணாதிக்கம், பெண்களுக்கு எதிரான மனப்போக்கு, பெண்களுக்கு எதிரான பண்பாட்டுச் சூழல் போன்றவற்றில் உடன்பாடு இல்லாதவர் என்பதால், அந்தக் கருத்தில் ஒரு படத்தைச் செய்ய விரும்பினார்.
பெண்களின் கண்ணோட்டத்தில் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது. இந்த அம்சங்களை எல்லாம் கலந்த படமாகவும் ‘விடாமுயற்சி’ இருக்கும்.‘விடாமுயற்சி’யை சந்தோஷமா எடுத்திருக்கேன் படம் பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்” எனவும் நெகிழ்ச்சியுடன் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார்.